நாகர்கோவில் அருகே பிரபல பெண் யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி மற்றும் அவருக்கு உதவிய இரு நண்பர்கள் என மொத்தம் 3 பேரைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஏலக்காய் வியாபாரி வினோத்குமார் (33). இவரது மனைவி பிரபல யூடியூபரும் இன்ஸ்டாகிராம் பிரபலமானவருமான மதுமிதா (28). இவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி தம்பதியினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற நேரத்தில், பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 118 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைத் தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், மதுமிதாவின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சென்றது தெரியவந்தது.

அந்தப் பாதையைக் கண்காணித்துச் சென்றதில், கொள்ளையில் ஈடுபட்டவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (30) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இசக்கிபாண்டியைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து சில நகைகள் மீட்கப்பட்ட நிலையில், கொள்ளையடித்த நகைகளைத் தனது நண்பர்களான முருகன், முருகேசன் ஆகியோரின் உதவியுடன் பலருக்குப் பிரித்துக் கொடுத்து விட்டதாகத் தெரிவித்தார்.

அதன்பேரில், தலைமறைவாக இருந்த முருகன், முருகேசன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்காக ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவிலுக்கு இசக்கிபாண்டி மோட்டார் சைக்கிளிலேயே வந்துள்ளார். கூட்டாளிகளைச் சேர்த்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் தனியாகவே இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

கொள்ளையடித்த பிறகு ஊருக்குச் சென்று, காவல் துறைக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகத் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டுள்ளார். இருப்பினும், சாதுரியமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

கைது செய்யப்பட்ட இசக்கிபாண்டி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது: "நான் முன்பு 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்தேன். தற்போது லாரி டிரைவராக உள்ளேன். எனக்கு 30 லட்சம் கடன் உள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால், அதை அடைக்க முடியாமல் தவித்தேன்.

அப்போது இன்ஸ்டாகிராமில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா தனது வீட்டில் அதிகளவில் நகை, பணம் இருப்பதாக வீடியோ பதிவிட்டதைப் பார்த்தேன். அவரது வீட்டில் கொள்ளையடித்தால் கடனை அடைத்துவிடலாம் எனத் தோன்றித் திட்டம் தீட்டினேன். சில நாட்கள் மதுமிதா வீட்டை நோட்டமிட்டேன்.

அவர்கள் குடும்பத்தோடு வெளியே சென்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து நகைகளைத் திருடினேன். பின்னர் எனது நண்பர்கள் முருகன், முருகேசன் உதவியுடன் நகைகளைப் பிரித்து விற்றுப் பணமாக்கினேன்" என்று தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்தும் மீதி நகைகளை மீட்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்