இந்தியா பல்வேறு மதங்கள், மொழிகள், சமூகங்கள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். இந்தியாவின் சுதந்திரம் ஒரே ஒரு சமூகத்தின் தியாகத்தால் கிடைத்ததல்ல; இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பிராமணர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த எண்ணற்ற இந்தியர்கள் ஒன்றிணைந்து போராடித் தியாகம் செய்ததன் விளைவாகும். சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் கல்வி, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

"இயற்கைக்கு முன்னே எதுவுமே நிரந்தரமில்லை; காலத்திற்கேற்ப அனைத்தும் மேம்படுத்தப்படலாம்" என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை மதிப்பது என்பது அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதல்ல. அதேபோல், சீர்திருத்தம் பற்றி விவாதிப்பது அதை நிராகரிப்பதும் அல்ல. சமூகம் மாறும்போது தேவைகளும் மாறுகின்றன. எனவே, ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளைப் பாதுகாத்துத் தேவையான இடங்களில் சட்டபூர்வமான சீர்திருத்தங்களுக்கு உட்படுவது இயல்பான நடைமுறையாகும்.

இந்தியாவின் உண்மையான வளம் அதன் மனித வளமே ஆகும். கல்வியறிவு, திறன், ஒழுக்கம், அறிவியல் சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட மனிதர்களை உருவாக்குவதே நீண்டகால தேசிய வளர்ச்சியின் அடிப்படையாகும். இயற்கை வளம், இயந்திர வளம் மற்றும் மனித வளம் ஆகியவை சமநிலையுடன் வளரும்போதே நிலையான முன்னேற்றம் சாத்தியமாகும்.

அரசமைப்புச் சீர்திருத்தம் பற்றிய விவாதங்கள் அரசியல் பகைமையாக மாறாமல், நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் வழியாக அமைதியாகவும் அறிவார்ந்த முறையிலும் நடைபெற வேண்டும்.

"கலவரம் வேண்டாம் — கருத்தை ஜனநாயகமாகப் பேசுவோம்; பிரிவினை வேண்டாம் — ஒற்றுமையை வளர்ப்போம்; வெறுப்பு வேண்டாம் — மனிதநேயத்தை வளர்ப்போம்" என்ற அடிப்படையில், 2047-ல் வளர்ந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் பொறுப்புடன் கரங்கோர்க்க வேண்டும்.

  • முனைவர் ஜெ .கோமளலட்சுமி