» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

செவ்வாய் 3, ஜூன் 2025 5:31:25 PM (IST)

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  "கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருவது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்து உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மே 22-ஆம் தேதி 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 3,758 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, பத்து நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 மடங்கு உயர்ந்து இருக்கிறது.

ஒமைக்ரான் வைரசின் துணை வகை வைரசால் கொரோனா தொற்று வேகமாக பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒமைக்ரான் ஜே.என்-இன் மாறுபாடான எல்.எப்.7 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன. சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கல் வேகமெடுத்திருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இதன் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கத்ததை கட்டுப்படுத்தும் வண்ணம், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருவோர் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய சோதனை மேற்கொள்வதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே, குறிப்பாக முதியவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஏற்படுத்தவும், மருத்துவமனைகளில் தேவையான மாத்திரைகளை இருப்பில் வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

MIXTURE MAMAJun 5, 2025 - 12:49:09 PM | Posted IP 162.1*****

அமிதாப் மாமாவுக்கு கோவம் வந்துவிட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors





CSC Computer Education



Thoothukudi Business Directory