» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையை வெளியிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

புதன் 21, ஆகஸ்ட் 2024 12:41:33 PM (IST)

2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், தேர்வுக்கான அறிவிப்புக் கூட இன்னும் வெளியிடப்படாதது கண்டிக்கத்தக்கது.


மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டில் இந்த விதியை அரசு மதிப்பதே இல்லை; தகுதித் தேர்வும் நடத்தப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.

2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியை பெற முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் கூட அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை.

லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு சார்ந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விரைவாக தேர்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory