» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வெள்ளி 21, ஜூன் 2024 3:53:23 PM (IST)

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது; "தமிழ்நாடு அரசுக்கு ஆக்கபூர்வமான கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி, நிச்சயமாக அரசு கருத்தில் கொள்ளும். எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார்.

விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மெத்தனால் கலந்து சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே உள்ள 161 மருத்துவர்களோடு கூடுதல் மருத்துவர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 பேர் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 66 பேர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால் ரூ.3 லட்சம் வைப்பு நிதி அளிக்கப்படும். இருவரையும் இழந்திருந்தால் அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி அளிக்கப்படும். 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் தொகை அளிக்கப்படும்.

அமைச்சர்கள் மட்டுமல்லாமல் உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன்.

அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை. பிரச்சினையை கண்டு ஓடி ஒளிபவன் நான் அல்ல, நடவடிக்கை எடுத்துவிட்டு பொறுப்பை உணர்ந்து பதில் அளித்துள்ளேன். திறந்த மனதோடு இரும்பு கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

தமிழன்Jun 21, 2024 - 06:11:58 PM | Posted IP 162.1*****

இனி வருங்காலங்களில் இது போன்ற கள்ள சாராய சாவுகள் அதிகமாகும்.ஏனென்றால் அரசு நிறைய நிவாரண தொகை கொடுக்க தயாராகி விட்டது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory