» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 8:03:18 PM (IST)

விளையட்டு ஆணையம் நடத்தும் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும். இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். 

அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 29 முதல் மே 13ஆம் தேதி வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடைபந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்புக்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்துவோம், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கு பெறுவதை ஊக்குவிப்போம் என்றும், அதற்காக மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதமரை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு முதல்வரின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் திமுக அரசு தமிழக மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் முயற்சி.

இந்த ஆட்சியாளர்களின், குறிப்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, "தகுதி இல்லாதவர் கையில் அதிகாரம் கிடைத்தால், அவர் திறமைசாலிகளைக்கூட தகுதியற்றவர்களாக்கி விடுவார்" என்ற மேலை நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்வர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்திசாலி அமைச்சரிடம் இதைவிடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

விளையாட்டில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த நாடகமாடி அரசின் செயலை, அதிமுகவின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory