» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆளுநர் விலக வேண்டும், இல்லையேல் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் : வைகோ அறிக்கை!

திங்கள் 9, ஜனவரி 2023 3:43:49 PM (IST)

"உடனடியாக அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்." என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாடு சட்டப்பேரவை, 2023-ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரை என்பது, தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று, பிறகு அச்சிடப்பட்டு அவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அந்த உரையை ஆளுநர் பேரவையில் வாசிப்பது என்பதுதான் சட்டப்பேரவை மரபாகும்.

ஆனால், தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட உரைக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்த பின்னர், அச்சிடப்பட்டு பேரவையில் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஆளுநர் அந்த உரையினை தமது விருப்பம்போல் மாற்றியும், சிலவற்றை நீக்கியும் எடுத்துரைத்து இருக்கிறார். தமிழ்நாடு அரசு என்று குறிப்பிட்டுள்ள இடங்களில் எல்லாம் ‘இந்த அரசு’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றிக் கூறியுள்ளார். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற டாக்டர் கலைஞரின் மேற்கோளையும், திராவிட மாடல் அரசு என்பதையும் ஆளுநர் புறக்கணித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்கள் பெயரையும் தமது உரையிலிருந்து நீக்கிவிட்டார். திராவிட மாடல் அரசு, சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண் உரிமை, மதநல்லிணக்கம் ஆகிய வார்த்தைகள் ஆர்எஸ்எஸ் ரவிக்கு எட்டிக்காயாக இருந்ததால் திட்டமிட்டே புறக்கணித்து உள்ளார். 

சட்டம் - ஒழுங்கு சிறப்பாக நிலைநாட்டப்படுவதால், தமிழ்நாடு அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது என்ற சொற்றொடரையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காதது மிகவும் வருத்தத்திற்குரியது என்று தெரிவித்துள்ள முதல்வர், ஏற்கெனவே அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும். மாறாக ஆளுநரால் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்று தீர்மானம் முன்மொழிந்து, நிறைவேற்றி இருப்பது ஆளுநருக்குச் சரியான பதிலடி ஆகும்.

ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று உச்சரிக்க மறுத்ததன் மூலம், காஷ்மீர் போல தமிழ்நாட்டையும் இந்துத்துவா சனாதன சக்திகள் குறிவைத்துள்ளன என்பது புலனாகிறது. தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையின் மரபை மீறி, அரசால் தயாரிக்கப்பட்ட உரையை மாற்றிப் படித்தது கடும் கண்டனத்துக்கு உரியது. இத்தகைய அடாவடிச் செயல்களை ஆளுநர் தமிழ்நாட்டில் நிகழ்த்தி வருவதை அனுமதிக்கவே முடியாது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன. இந்துத்துவா சனாதனக் கோட்பாட்டின் காவலராக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநர் பதவியில் நீடிக்க எந்தத் தார்மிக அருகதையும் இல்லை. உடனடியாக அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் குடியரசுத் தலைவர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்து இருப்பதும், மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும். சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. 23 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்டுள்ள 17.70 லட்சம் மனுக்களில் 16.28 இலட்சத்திற்கும் மேலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும், தமிழ்ப் பண்பாட்டினைப் பேணிக் காக்கவும், ‘தமிழ் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அயலகத் தமிழர்களுக்கும், தாய்த் தமிழ்நாட்டிற்கும் ஒரு பாலமாக இயங்குவதற்கும், அவர்களின் நலனைக் காப்பதற்கும் அயலக தமிழர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பொருளாரதார ஆலோசனைக் குழு மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமான திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்தி வருகிற திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், எதிர்கால செயல்திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு இடம்பெறச் செய்திருக்கிறது” என்று வைகோ கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

samiJan 20, 2023 - 09:29:49 AM | Posted IP 162.1*****

yes my lord- the highest authority of unesco is telling - be careful

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory