» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உதயநிதி அமைச்சராகிவிட்டால் தேனாறும், பாலாறும் ஓட போகிறதா? இபிஎஸ் பேச்சு!

செவ்வாய் 13, டிசம்பர் 2022 3:26:45 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்டால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓட போகிறதா?  வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: தொடர்மழை இருக்கின்றபோது பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைத்தார்கள். தொடர் மழை இடைவிடாமல் பெய்தாலும் அந்த மழையை பொருட்படுத்தாமலும் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட தொண்டர்கள் இங்கு கூடி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, அம்மா காலத்திலும் சரி சேலம் மாவட்டம் என்றால் அ.தி.மு.க. கோட்டை. இந்த கோட்டையில் நுழைய பார்க்கிறார்கள். ஆனால் இந்த மழையை பொருட்படுத்தாமல் அரண்போல் காக்கின்ற மக்கள் இருக்கின்ற வரை சேலம் மாவட்டத்தில் எவரும் நுழைய முடியாது. மக்கள் பாதுகாக்கின்றனர். பேச பேச வருண பகவான் மழையை பொழிந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு விவசாயி.மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைக்கின்ற உழைப்பாளி குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆகவே மழை எவ்வளவு கொட்டினாலும் பரவாயில்லை. 

இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு எடுத்திருக்கிற சபதம் நிறைவேற்றவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம். மழையை கண்டோ இந்த ஆட்சியை கண்டோ பயன்படுகின்ற கூட்டம் இல்லை அ.தி.மு.க. கூட்டம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்கு உழைத்த மாமனிதர் உதயநிதி ஸ்டாலினாம். எண்ணிப் பாருங்கள் கருணாநிதி முதல்-அமைச்சராக வந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். 

அவருக்கு அடுத்து அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னணி தலைவராக கொண்டு வருவதற்காக இதை ஒரு முன்னோட்டமாக நாளை முடிசூட்டு விழா நடைபெறுகின்றது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்டால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓட போகிறதா? இல்லை. ஏற்கனவே எல்லா துறையிலும் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராக இருந்து செயல்படுவார். அதுதான் நடக்கும். ஆகவே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காத ஆட்சி ஒன்றால் அது தி.மு.க. ஆட்சி. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதில் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

மாநிலத்துக்கு ஒரு முதல்-அமைச்சர் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 4 முதல்-அமைச்சர்கள். ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய மருமகன். ஆகவே 4 முதல்-அமைச்சர் கொண்ட ஒரு மாநிலம் தமிழ்நாடு. ஒரு முதல்-அமைச்சருக்கே தாக்குப்பிடிக்க முடியாது. 4 முதல்-அமைச்சர் இருந்தால் இந்த தமிழ்நாடு தாக்குப்பிடிக்க முடியுமா?. ஆகவே குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்.

தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் யார் வேண்டுமானாலும் இயக்குநர் ஆகலாம். இயக்குநர் ஆனால் அந்த கட்சியில் அமைச்சர் பதவி கிடைக்கும். ஏனென்றால் அந்த கட்சியில் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் தான் பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் விசுவாசமாக இருப்பவர்களுக்கு அவர்களின் வீடு தேடி சென்று பதவி கிடைக்கும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory