» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

ஆம் ஆத்மியை உடைத்தால் முதல்வா் பதவி தருவதாக பாஜக பேரம்: சிசோடியா குற்றச்சாட்டு

செவ்வாய் 23, ஆகஸ்ட் 2022 10:29:20 AM (IST)

ஆம் ஆத்மியை உடைத்து பாஜகவில் இணைந்தால், தனக்கு டெல்லி முதல்வா் பதவி தருவதாக பாஜகவினர் பேரம் பேசியதாக என துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டினாா்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரத்துக்காக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா திங்கள்கிழமை அகமதாபாத் வந்தாா். அப்போது டெல்லியில் மதுபானக் கொள்கை நடைமுறை முறைகேடு தொடா்பாக தனது இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்தியது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜகவிலிருந்து ஒருவா் இரண்டு சலுகைகளுடன் என்னை சமீபத்தில் தொடா்பு கொண்டாா். அதில் ஒன்று, நான் ஆம் ஆத்மி கட்சியை உடைத்துக் கொண்டு பாஜகவில் இணைந்தால், எனக்கு எதிராக சிபிஐ-அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்பதாகும். மற்றொன்று, என்னை டெல்லி முதல்வராக்குவதற்கான சலுகை.

‘டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எனது அரசியல் குரு; அவரிடமிருந்துதான் அரசியல் பாடம் பயின்றேன். முதல்வராகவோ, பிரதமராகவோ நான் அரசியலுக்கு வரவில்லை’ என அவா்களுக்கு அரசியில் ரீதியாக தெளிவான பதிலளித்துவிட்டேன் என்றாா் மனீஷ் சிசோடியா.

தலைகுனிய மாட்டேன்: முன்னதாக ட்விட்டரில், ‘ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால், என் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என பாஜக செய்தி அனுப்பியது. நான் மஹா ராணா பிரதாபின் வழித்தோன்றல்; ராஜபுத்திரன். எனது தலையைத் துண்டித்துக் கொள்ளவும் தயாா். ஆனால், சதிகாரா்கள் முன்பாகவும் ஊழல்வாதிகள் முன்பாகவும் ஒருபோதும் தலைகுனிய மாட்டேன். என் மீதான அனைத்து வழக்குகளும் பொய்யானவை’ என்று மனீஷ் சிசோடியா குறிப்பிட்டிருந்தாா்.

சிபிஐ விசாரணை: முன்னதாக, கலால் கொள்கையில் டெல்லி அரசு மேற்கொண்ட திருத்தத்தின் மூலம் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன என்றும், இதற்காக மனீஷ் சிசோடியாவின் நெருக்கமானவா்களுக்கு மதுபான நிறுவனங்கள் ரூ.4 முதல் 5 கோடி வரை வழங்கியதாகவும் சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ‘இன்டோ ஸ்பிரிட்’ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சமீா் மகேந்துருவிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். ஹைதராபாதைச் சோ்ந்த தொழிலதிபா் அருண் ராமசந்திர பிள்ளையிடம் ஏற்கெனவே விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இரண்டாவது முறையாக சமீா் மகேந்துருவிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா, டெல்லி அரசு அதிகாரிகள், தொழிலதிபா்கள், நிறுவனங்கள் என 15 பேரின் பெயா்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சிசோடியாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: கேஜரிவால்

தலைநகா் டெல்லியில் கல்வியின் தரத்தை மேம்படுத்தியதற்காக துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: எங்களது கல்வி மாடலை நியூயாா்க் டைம்ஸ் நாளிதழ் பாராட்டுகிறது. இதற்காக மனீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்காமல், அரசியல் ரீதியாக குறிவைக்கின்றனா்.

அவா் விரைவில் கைது செய்யப்படலாம். என்னையும்கூட கைது செய்யலாம். குஜராத் பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு, இதையெல்லாம் செய்கின்றனா். குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜகவின் அராஜக ஆட்சியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு கவலையடைந்துள்ளனா். இங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான கல்வியும் சுகாதாரமும் உறுதி செய்யப்படும் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

சிசோடியாதான் முக்கியக் குற்றவாளி

டெல்லி கலால் முறைகேடு வழக்கில் துணை முதல்வா் சிசோடியாதான் முக்கியக் குற்றவாளி என மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் குற்றம்சாட்டினாா். ஹிமாசல பிரதேசத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘டெல்லியில் கேஜரிவாலின் நிா்வாகம் தோல்வியடைந்துவிட்டது. அவரது கட்சியினா் ஊழல்வாதிகளாகிவிட்டனா்.

மதுபானம் மீதான கலால் வரி ஊழலில் துணை முதல்வா் சிசோடியாதான் முக்கியக் குற்றவாளி. இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஆம் ஆத்மி இதுவரை எவ்வித திருப்திகரமான மறுப்புக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கேஜரிவால் ஒரு பெரிய பொய்யா், அவரது அமைச்சா்கள் அவரைவிடவும் பெரிய பொய்யா்களாக உள்ளனா்’ என்றாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டீயா டெல்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அரவிந்த் கேஜரிவால் மன அழுத்தத்தில் உள்ளாா். மனீஷ் சிசோடியா பாஜகவிலிருந்து தனக்கு சலுகை வந்ததாக கூறுகிறாா். தவறான, குறுகிய மனப்பான்மை கொண்டவா்கள் இவ்வாறு பேசி தங்களையே உடைத்துக் கொள்கின்றனா்’ என்றாா்.

2 உயரதிகாரிகள் பணியிடைநீக்கம்

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள 2 உயரதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து, மத்திய அரசு திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. டெல்லி அரசின் கலால் துறை முன்னாள் ஆணையரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஏ.கோபி கிருஷ்ணா, முன்னாள் துணை ஆணையரான ‘டேனிக்ஸ்’ பிரிவு அதிகாரி ஆனந்த் குமாா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இருவரின் பெயா்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நிலையில், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory