» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

தரம் தாழ்ந்த மூட அரசியல் தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்: முதல்வர் ஸ்டாலின்

ஞாயிறு 14, ஆகஸ்ட் 2022 6:24:58 PM (IST)

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு முதலமச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய ஒன்றியத்தின் விடுதலைநாள் விழா உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நாட்டுக் கொடியை உயர்த்துகிறேன். மாநில முதல் அமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி, மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமைபெற உறுதியேற்பதுதான் விடுதலைப் பவள விழாவான இந்த 75ஆம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களின் நோக்கமாக உள்ளது.

இறையாண்மைமிக்க மத்திய அரசு - இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் வழியே கூட்டாட்சிக் கருத்தியலை முன்னெடுக்கின்ற நிலையில், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.

வெளிநாட்டில் இருந்து ஆதிச்சநல்லூர் பொருட்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டு வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் மறைவுக்கு, முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய இரங்கலைத் தெரிவித்ததுடன், ராணுவ வீரரின் உடலுக்குச் செலுத்தப்பட வேண்டிய அரசின் மரபார்ந்த மரியாதையைச் செலுத்திடுமாறு நிதி அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை பணித்திருந்தேன்.

அமைச்சர், அந்த வீரமகனை இழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினார்.

அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவரும், அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததுடன், அதுகுறித்து அமைச்சரும் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.

தேசியக் கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள். வீரமரணம் எய்திய ராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்த நினைத்திருந்தால் அவரது வீடு தேடிச் சென்று, குடும்பத்தினரைச் சந்தித்து, வீரரின் உடல் சுமந்த பெட்டி அங்கே வந்ததும் இறுதி வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும்.

விடுதலையின் 75-ஆவது ஆண்டினை வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்களோ, ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற வழியில் ராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போல அரசியல் லாபம் தேடலாம் என்ற கணக்குடன், சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்று, தேசியக் கொடியை அவமதித்துள்ளனர்.

இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, அமைச்சரை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், "இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்" எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பி.டி.ராஜனின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் புதல்வருமான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த வன்முறை நிகழ்வின் உண்மையைத் தெரிவித்து, மிகுந்த கண்ணியத்துடன் தனது கருத்துகளைத் வெளிப்படுத்தி யிருப்பதுடன், தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அமைச்சர் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, திமுக செயல் வீரர்களும் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உணர்வெழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், "மதவெறி அரசியலின் மலிவான விளம்பரத்திற்குப் பதிலடி என்ற வகையில் நாமும் அதற்கு இடம் அளித்துவிடக்கூடாது" என்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விடுத்த அறிக்கையை ஏற்று, அமைதி காத்து வருகிறார்கள்.

மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும்.

இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கட்சியும செயல்பட்டு வருகிறது.

இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன். இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

sankarAug 21, 2022 - 09:20:37 PM | Posted IP 162.1*****

தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்- saying something about his own party?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory