» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பெட்ரோல், டீசல் விலைஉயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும்: ரா.சரத்குமார் வலியுறுத்தல்

வெள்ளி 1, ஏப்ரல் 2022 11:05:54 AM (IST)

பெட்ரோல், டீசல் விலைஉயர்வை மத்திய – மாநில அரசுகள் கட்டுக்குள் வைக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசுகளும், டீசல் விலை 6 ரூபாய் 9 காசுகளும் உயர்ந்து, தற்போது தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 107.45 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 97.52 ரூபாய்க்கும் விற்கப்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலராக இருந்தபோது, 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் – டீசல் விலை மாற்றம் இல்லாமல் நீடித்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 115.62 டாலராக குறைந்துள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வது எதற்காக என்பது தான் புரியவில்லை.

சர்வதேச சந்தை ஏற்றம், இறக்கம் காணும் ஒவ்வொரு சமயமும், அரசு தனது லாபத்திற்காக வரி எனும் பெயரில் மக்கள் மீது சுமைகளை திணித்து சாமானியர்களை வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டிய நிலைக்கு தள்ளுகிறது. சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என கோரிக்கை வலுக்கும் சமயம், சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை உயர்த்துவதும், பெட்ரோல், டீசலுக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் தெரிவிப்பதும் மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானது.

விலைவாசி உயர்வது போல, நடுத்தர குடும்பங்களின் வருவாய் உயர்வதில்லை என்பதை அரசு உணர வேண்டும். அரசு கஜானாவில் நிதியை நிரப்ப மக்கள் மீது வரியை திணிப்பதற்கு முன்பாக, ஒவ்வொரு குடும்பங்களின் கஜானாவிலும் நிதி இருக்கிறதா என்பதையும் அரசு சிந்திக்க வேண்டும்.

பெட்ரோலிய பொருட்களின் தொடர் விலையேற்றமும், அதனால் ஏற்படக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் ஏழை, எளிய மக்களின் அன்றாட தேவையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியது என்பதை உணர்ந்து மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், அண்டை மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது போல, தமிழக அரசும் கலால்வரியை குறைத்திட வேண்டுமென சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory