» சினிமா » செய்திகள்

தொடர்ந்து முயற்சித்தால் கனவை அடையலாம் : விக்ரம் பேச்சு

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 3:27:53 PM (IST)

ஒரு கனவை அடைய வேண்டும் என்று நினைத்து அதன் முயற்சியிலேயே இருந்தால் அது உங்களை கொண்டு போய் சேர்க்கும் என்று நடிகர் விக்ரம் கூறினார். 

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

வரும் 15-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசியதாவது: தங்கலான் மாதிரி படத்தில் ஏன் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். எனக்குள்ளும் ஒரு தங்கலான் இருக்கிறான்.அவனுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அவன் ஒரு தலைவன். தன் மக்களின் விடுதலைக்காக அவனுக்கு ஒன்று தேவைப்படுகிறது.

அவனைச் சுற்றி இருப்பவர்கள் அது கிடைக்காது என்கிறார்கள். அவன் அடிபட்டு, காலை உடைத்து திரும்பி வந்து, என்னால் முடியும் என்று சொல்வான். இதை என் வாழ்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.

சிறுவயதில் சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்தபிறகு சரியாக படிக்கவில்லை. ஒரு நாடகத்தில் நடித்த போது சிறந்த நடிப்புக்காக விருது கொடுத்தார்கள். ஆனால், அப்போது எனக்கு விபத்து நடந்து, ‘தங்கலான்’ மாதிரியே என் காலை உடைத்துக் கொண்டேன். 23 அறுவைச் சிகிச்சைகள். காலை வெட்ட வேண்டும் என்றார்கள்.

3 வருடம் படுக்கையில் கிடந்தேன். மருத்துவர் என் அம்மாவிடம், இனி இவன் நடக்கவே மாட்டான் என்று சொன்னார். ஆனால் நடிக்க வேண்டும் என்று வெறியாக இருந்தேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள், நடக்கவே முடியாது, எப்படி நடிக்கப் போகிறாய் என்று கேட்பார்கள். பின் அதே காலைவைத்து வேலைக்கும் போவேன். மாதம் ரூ.750 சம்பளம்.

பின் சினிமாவுக்கு வந்தேன். 10 வருடம் போராடினேன். படங்கள் ஓடவில்லை. உனக்கு இது வரவில்லை, வேற வேலையை பார் என்று மறுபடியும் ஆரம்பித்தார்கள். அன்று நான் விட்டிருந்தால் இன்று இந்த மேடையில் இருந்திருக்க மாட்டேன்.

ஒரு கனவை அடைய வேண்டும் என்று நினைத்து அதன் முயற்சியிலேயே இருந்தால் அது உங்களை கொண்டு போய் சேர்க்கும். ஒருவேளை எனக்கு பெரிய வெற்றிப்படம் இன்று வரை கிடைக்காமல் இருந்தால் இன்றும் அந்த வெற்றிக்கு முயற்சி செய்து கொண்டுதான் இருந்திருப்பேன். இவ்வாறு விக்ரம் பேசினார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory