» சினிமா » செய்திகள்
பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது: எக்கோ நிறுவனம்
வெள்ளி 14, ஜூன் 2024 10:03:39 AM (IST)
பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என்று எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
இசையமைப்பாளா் இளையராஜா இசையில் சுமாா் 4,500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளா்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது; இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தாா்மிக சிறப்பு உரிமை இருக்கிறது என கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தாா். இதை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வு, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவா்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சாா்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னதாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண், இந்திய திரைப்படத் துறையில் உள்ள இசையமைப்பாளா்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்துக்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இந்த நிலையில், நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோா் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளருடன் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என்று எக்கோ நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய்நாராயண் வாதிட்டார்.
மேலும், தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளார் எனவும், இசையை திரித்தாலோ மற்றும் பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும்தான் தார்மிக உரிமை கிடைக்கும் எனவும் அவர் வாதிட்டார். இந்நிலையில், இவ்வழக்கை இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணையை வரும் ஜூன் 19 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.