» சினிமா » செய்திகள்
இந்தியாவுக்கு தமிழன் ஏன் தலைமை தாங்க கூடாது? - கமல்ஹாசன் பேச்சு!!
திங்கள் 3, ஜூன் 2024 9:59:59 AM (IST)
தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதே என் எண்ணம் என்று இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ளன. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
தயாரிப்பாளர் சுபாஷ்கரன், கமல்ஹாசன், ஷங்கர், இயக்குநர்கள் வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, "ஷங்கர் அடைந்திருக்கும் இந்த உயரம் விபத்தோ, அதிர்ஷ்டமோ இல்லை. அவரின் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அவரின் முதல் படத்துக்கு என்னிடம் வந்தார். அதில் கருத்து வேறுபாடு இருந்ததால் பண்ண முடியவில்லை. என்னிடம் திரும்ப வரமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் வந்தார். அவர் சொன்ன கதைக்கும் நான் சிவாஜி சாரை வைத்து எழுதியிருந்த கதைக்கும் கொஞ்சம் ஒற்றுமைஇருந்தது. தயங்கினேன். சிவாஜி சார், நீ ஷங்கர் படம் செய் என்று ஊக்கம் தந்தார். இன்று நான் இங்கு நிற்கக் காரணம், சிவாஜிதான். ஷங்கர் இன்று கட்டி வைத்திருக்கும் உயரம் பெரிது. கற்றுக்கொண்டே இருக்கிறார்.
என் அடையாளம், நான் தமிழன், இந்தியன் என்பதே! பிரித்தாளும் முயற்சி இந்தியாவில் நடக்காது. தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக் கூடாது என்பதே என் எண்ணம். இது என் நாடு, இந்நாட்டின் ஒற்றுமையைக் காக்க வேண்டியது நம் கடமை, அதை அழுத்தமாகச் சொல்வது தான் இந்தப்படம்” என்றார்.
இயக்குநர் ஷங்கர் பேசும்போது, " இந்தியன் படம் வந்தபோதே கமல் சார் 2-ம் பாகம் எடுக்கலாம் என்றார். கதை இல்லை என்று சொல்லிவிட்டேன். 7 வருடங்களுக்கு முன் இப்போது இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. 28 வருடம் முன்னால் இந்தியனில் அவர் மேக்கப் போட்டுவந்த போது கூஸ்பம்ப் வந்தது.
அது ‘இந்தியன் 2’ போட்டோஷூட்டில் மீண்டும் வந்தது. 6 மணி நேரம் மேக்கப் போட்டு 70 நாட்கள் நடித்திருக்கிறார். ஒரு காட்சியை 4 நாள் எடுத்தோம். கயிற்றில் தொங்கிக் கொண்டு, வேறு மொழி பேசி, கையில் வரைந்து கொண்டே நடிக்க வேண்டும். உலகில் யாராலும் முடியாத அதைச் செய்துள்ளார்” என்றார்.