» சினிமா » செய்திகள்
மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? இமயமலைக்கு புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!
புதன் 29, மே 2024 10:24:29 AM (IST)
நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரகால ஆன்மிக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வந்தார். இதில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவு பெற்றது.
இதையடுத்து அவர் ஓய்வுக்காக அபுதாபி சென்றார். ஐக்கிய அரபு அமீரக அரசு, அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அங்குள்ள இந்து கோயிலுக்கும் சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. சுமார் இரண்டு வார கால ஓய்வுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார்.
ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கரோனா பரவல் காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார்.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து ஆன்மீக பயணமாக இமயமலை புறப்படும் முன்பாக விமான நிலையத்திற்கு காரில் சென்ற ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இமயமலை பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், "ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். இப்போது அங்கு சென்று கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை சென்று திரும்ப இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அப்போது நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாரா ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், "சாரி, அரசியல் கேள்விகள் வேண்டாம்" என பதில் அளித்தார். இசையா? கவிதையா என்ற போட்டி தமிழ் சினிமா உலகில் நிலவி வருவது பற்றி உங்கள் கருத்து என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தவாறு கையெடுத்துக் கும்பிட்ட ரஜினிகாந்த், "அண்ணா.. நோ கமெண்ட்ஸ்" எனக் கூறிவிட்டு கிளம்பினார்.