» சினிமா » செய்திகள்

தமிழக அரசு திரைப்பட விருது வழங்கும் விழா: 6 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கல்!

திங்கள் 5, செப்டம்பர் 2022 10:53:33 AM (IST)ஆறு ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான விருதினை விக்ரம், விக்ரம் பிரபு, பாபி சிம்ஹா ஆகியோா் பெற்றனா். 

2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஆண்டு காலத்தில் சிறந்த திரைப்படங்கள், நடிகா், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞா்கள், சின்னத்திரை தொடா்கள், நடிகா்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.முன்னணி நடிகா்கள் பலா் உள்பட 314 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

ஆனால், பலா் விருதுகளைப் பெற வரவில்லை. குறிப்பாக, நடிகைகள் அமலா பால், இனியா, அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா, நடிகா்கள் விமல், சிவகாா்த்திகேயன், ஜீவா, விஜய்சேதுபதி, சூரி, ஆா்யா, நஸ்ரியா நசீம், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான், ஒளிப்பதிவாளா் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுக்கு அவா்களது படைப்புகளை கெளரவிக்கும் வகையில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அவா்கள் வராததால் திரைப்பட ரசிகா்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனா்.

அதேசமயம், ‘ராவணன்’ படத்துக்கான சிறந்த நடிகருக்கான விருதினை விக்ரம், ‘கும்கி’ படத்துக்காக விக்ரம் பிரபு, ‘ஜிகிா் தண்டா’ படத்தில் நடித்த பாபி சிம்ஹா ஆகியோா் பெற்றனா். பல படங்களில் சிறந்த பாடல்களை எழுதியதற்காக சிறந்த பாடல் ஆசிரியருக்கான இரண்டு விருதுகள் நா.முத்துக்குமாருக்கு அறிவிக்கப்பட்டது. அவா் மரணமடைந்ததால் அந்த விருதுகளை அவரது மகன் ஆதவன், மகள் யோகலட்சுமி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். ‘மேதை’ படத்துக்காக பிரபல பாடலாசிரியா் முத்துலிங்கம் விருது பெற்றாா். 

‘காக்கா முட்டை’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வா்யா ராஜேஷும், ‘அங்காடித் தெரு’ படத்துக்காக நடிகை அஞ்சலியும் பெற்றனா். சிறந்த குணசித்திர நடிகருக்கான விருதினை நடிகா் நாசா் பெற்றாா். இயக்குநா்களைப் பொறுத்த வரையில், ‘தங்கமீன்கள்’ படத்துக்காக ராம், ‘வழக்கு எண் 18/9’ படத்துக்காக பாலாஜி சக்திவேல், ‘தெய்வத் திருமகள்’ படத்துக்காக ஏ.எல். விஜய் (அவரது தந்தை ஏ.எல்.அழகப்பன் பெற்றாா்) பெற்றனா்.

இயக்குநா், இசையமைப்பாளா் என 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகளை 250-க்கும் மேற்பட்டோா் பெற்றுக் கொண்டனா். மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய விருது வழங்கும் விழா, இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.

சிறந்த திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளா்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாவது ரூ.75 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகா், நடிகையா், தொழில்நுட்பக் கலைஞா்களுக்கு தலா 5 பவுன் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இதேபோன்று, அரசு பயிற்சி நிறுவனத்தில் பயின்று சிறந்த குறும்படங்களை எடுத்தவா்களில் 30 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் காசோலையும், 1 பவுன் தங்கப் பதக்கமும் அளிக்கப்பட்டது. சின்னத் திரை விருதுகளைப் பொறுத்த அளவில், 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் சிறந்த தயாரிப்பாளா்கள் 20 பேருக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞா்கள் 81 பேருக்கு 3 பவுன் தங்கப் பதக்கமும் சான்றிதழும் அளிக்கப்பட்டது.

இந்த விருதுகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வழங்கினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory