» சினிமா » செய்திகள்

என்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும்: காவல்துறைக்கு மீரா மிதுன் சவால்!

வெள்ளி 13, ஆகஸ்ட் 2021 12:51:54 PM (IST)

என்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும் என காவல்துறைக்கு சவால் விடும் வகையில் நடிகை மீரா மிதுன் பேசியுள்ளார். 

2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் மீரா மிதுன். ஆனால் அதில் திருமணம் ஆன தகவலை மறைத்ததோடு, வயதையும் குறைத்து கூறியுள்ளார். இதனால் மீரா மிதுனிடம் இருந்து அழகிப் பட்டம் திரும்ப பெறப்பட்டது. தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். இதிலும் பல சர்ச்சைகளை கிளப்பினார். முகென் மற்றும் தர்ஷனிடம் லவ் புரபோஸ் செய்தார் மிரா மிதுன் கடைசியில் அவர்களையே தூற்றினார். பின்னர் இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி ஒரு பிரளயத்தை உருவாக்கினார்

தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்களை தகாத வார்த்தைகளால் பேசி பரபரப்பை கிளப்பினார். தமிழ் சினிமாவில் நெப்போட்டீஸம் உள்ளது என்றும் சில குடும்பங்களே தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் வாய்க்கு வந்தபடி பேசினார். நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், சூர்யா, இயக்குநர்கள் பாண்டிராஜ், பாரதிராஜா என பலரையும் கன்னாபின்னவென பேசி வீடியோ வெளியிட்டார்.

ஏதாவது பேசி வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மீரா மிதுன். தனக்கு என்ன பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் என பலரின் டிவிட்டர் ஹேண்டிலையும் குறிப்பிட்டு புகார் செய்து வந்தார் மீரா மிதுன். தான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றும் தான் தான் அடுத்த ஜெயலலிதா என்று கூறியும் பரபரப்பை ஏற்படுத்தினார். கொள்ள போவதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார் மீரா மிதுன். அவ்வப்போது அரைகுறை உடையில் ஆபாச நடனத்துடன் வீடியோ வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் படுக்கையில் அலங்கோலமாக இருந்த வீடியோக்களும் போட்டோக்களும் வெளியானது.

இந்நிலையில் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பட்டியலின சாதியினர் குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார். சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந்தது. சினிமாத் துறையில் இருந்து அந்த குறிப்பிட்ட சாதி இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா உருப்படும் என்பதை போல் பேசியிருந்தார்.

மேலும் அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால்தான் அவர்களை அனைவரும் திட்டுகிறார்கள் ஒதுக்குகிறார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த வீடியோ பரபரப்பை கிளப்பிய நிலையில் அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த புகாரில் நேரில் ஆஜராக நடிகை மீரா மிதுனுக்கு சென்னை சைபர் க்ரைம் போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ஒரு புதிய வீடியோவை மீரா மிதுன் போஸ்ட் செய்துள்ளார். அதில் காவல் துறைக்கு சவால் விடும் வகையில் மீண்டும் பேசியுள்ளார் மீரா மிதுன். அதாவது. தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள மீரா மிதுன், " நான் ஒரு தமிழ் சாதி பொண்ணு, ஒரு தமிழ் பெண் இந்த தமிழ்நாட்டில் வளர்ச்சியடைவதை பலரால் சகித்து கொள்ள முடியவில்லை. ஆனால், வேறு மாநில பெண்கள் இங்கு வளர முடிகிறது காந்தி, நேரு ஜெயிலுக்கு போகும் போது நான் போனா என்ன? என்னை கைது செய்வது என்பது உங்கள் கனவில்தான் நடக்கும் என கூறியுள்ளார்.

பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறானவர்கள் என்று சொல்லவில்லை ; எனக்கு தொந்தரவு கொடுத்த அந்த சமூகத்தை சேர்ந்தவர்களைதான் தவறானவர்கள் என்று சொன்னேன். மேலும், தமிழ்நாட்டில் என்னைப் போன்ற ‘புத்திசாலி' பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்ற வழக்குகளை சந்திப்பதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை ; ஏனென்றால் நான் அவ்வளவு பிஸியாக இருக்கிறேன் என்றும் நடிகை மீரா மீதுன் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் இன்று ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகை மீரா மிதுன் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், தனிப்படை அமைத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு ஆஜர் படுத்த நேரிடும் என வழக்கறிஞர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது. மேலும் சமூக வலைதளங்களிலும், சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

ஏற்கனவே நடிகர்களை பற்றி அவதூராக பேசியது , கொலை மிரட்டல் விட்டது ,பண மோசடியில் ஈடுப்பட்டது உள்ளிட்ட வழக்குகளும் கேரள மக்களை அவதூறாக பேசிய வழக்குகளும் மீரா மிதுன் மீது நிலுவையில் உள்ளது. துணை நடிகையாக வாய்ப்பு கிடைக்காத மீரா மிதுன் தான பிரபலமடைவதற்காக தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இதனிடையே விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory