» சினிமா » திரை விமர்சனம்

விஜய் நடித்துள்ள தி கோட் திரை விமர்சனம்:

சனி 7, செப்டம்பர் 2024 8:36:23 AM (IST)

விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) திரைப்படம் 2024 செப்டம்பர் 5ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. 

காந்தி (விஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் (பிரபுதேவா), அஜய் (அஜ்மல்) ஆகிய நால்வரும் மத்திய அரசின் தீவிரவாத ஒழிப்புக் குழுவில், தங்கள் குடும்பங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வேலை செய்கிறார்கள். நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி அனுவையும் (சினேகா) 5 வயது மகன் ஜீவனையும் சுற்றுலா எனக் கூறி தாய்லாந்துக்கு அழைத்துச் செல்கிறார் காந்தி. ஆனால், அதுவொரு மிஷன். 

அங்கு களேபரத்தில் காந்தியின் மகன் விபத்தில் இறந்துபோகிறான். மகனை இழந்த காந்தியின் குடும்ப வாழ்க்கை, பணி வாழ்க்கை இரண்டிலும் அடுத்து வந்த 18 ஆண்டுகள் எப்படி அமைந்தன? அதில் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்தான் கதை.

2008-ல் தொடங்கும் கதை, நிகழ்காலம் நோக்கி ஒரே காலக் கோட்டில் விறுவிறுவென நகரும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைக்கதை. அதில், ‘லாஜிக்’ இல்லாமல் எக்குத்தப்பான திருப்பங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. லாஜிக்கை ரசிகர்கள் சட்டைசெய்யாமல் இருக்க, மிரள வைக்கும் நட்சத்திர அணி வகுப்பு, டி- ஏஜிங் தொழில்நுட்பத்தில் வரும் சில கதாபாத்திரங்கள், விஜய்யின் இரட்டை வேடம், ரஷ்யாவில் படமாக்கப்பட்ட காட்சிகள், ஆக்‌ஷன் காட்சி களில் ‘மிஷன் இம்பாஸிபிள்’ பாணி சித்தரிப்பு என ‘மாஸ் என்டர்டெயினர்’ தன்மைக்கே முதலிடம் கொடுத்திருக்கிறார்.

கென்யாவுக்குத் தப்பிய ராஜீவ் மேனனை (மோகன்) பிடிக்கும் தொடக்கக் காட்சி நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதன்பின் இடைவேளைத் திருப்பத்துக்கு முன்பு வரையிலான நட்பு மற்றும் குடும்பக் காட்சிகள் சராசரி ரகம். இரண்டாவது விஜய் வந்தபிறகு வரும் காட்சிகள் மாஸ் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம். குறிப்பாக இரண்டு விஜய்களுக்கும் இடையிலான ஆடு புலியாட்டத்தில் அவர்களது உறவில் இருக்கும் உணர்வு பின் தள்ளப்பட்டு, கிளைமாக்ஸ் வரை ஆக்‌ஷன் சித்தரிப்பே அதிகம் இருப்பதால் திரையரங்கை விசில் சத்தமும் கூச்சலும் ஆக்கிரமித்துவிடுகிறது. இரட்டை வேடங்களைப் போகிற போக்கில் ஊதித் தள்ளியிருக்கும் விஜய், டி-ஏஜிங் கதாபாத்திரத்துக்கான நடிப்பைக் கொடுத்த விதத்திலும் அசரடித்திருக்கிறார். ஆனால், அவர் கதையில் செய்யும் மிஷன்களின் உள் விவகாரம் விவரிக்கப்படாததால் (கிளைமாக்ஸ் தவிர) அவை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டிய அழுத்தம், பொம்மை துப்பாக்கியைப் பார்க்கும் அனுபவமாக முடிந்துவிடுகின்றன.

பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் விஜயுடன் வருகிறார்கள். சினேகா, ஜெயராமுக்கு சொல்லிக்கொள்ளும் விதமாகக் கதை நகர்வில் காட்சிகள் அமைந்திருக்கின்றன. மோகன், எதிர்மறை வேடத்துக்குப் பொருந்தியிருந்தாலும் அவர் ஏன் தேடப்படுகிறார் என்கிற பின்னணி சரிவரச் சொல்லப்படாததால் அவரது கதாபாத்திரம் மீது ஏற்பட்டிருக்க வேண்டிய வெறுப்பு, பயம் மிஸ்சிங். யோகிபாபுவை வைத்து ‘நாஸ்டால்ஜிக்’ அரசியல் நையாண்டி, கிளைமாக்ஸ் காட்சியில் கிரிக்கெட் வர்ணனையையும் ஆக்‌ஷனையும் இணைத்து ஆடியிருக்கும் ஆட்டம் என, தனது பாணியின் முத்திரைகளோடு அடித்து ஆடியிருக்கிறார் வெங்கட் பிரபு. சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுகின்றன. பாடல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் அதை ஈடுகட்டி விடுகிறது யுவன் சங்கர் ராஜாவின் இசை.

தனது ரசிகர்களுக்கு நடனம், வசனம், நடிப்பு ஆகியவற்றின் வழியாகப் பொழுதுபோக்கை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என்பதே விஜய் கொண்டிருக்கும் முடிவு. அதற்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் மசாலா மணக்கும் ‘கோட்’ பிரியாணியில் சுவை குறைவு, சூடு அதிகம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

CSC Computer Education





Thoothukudi Business Directory