» சினிமா » திரை விமர்சனம்

நடிகர் சூரி நடிப்பில் கொட்டுக்காளி - திரை விமர்சனம்!

சனி 24, ஆகஸ்ட் 2024 8:11:42 AM (IST)



தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பி.எஸ். வினோத்ராஜ். இவர் இயக்கிய முதல் படம் கூழாங்கல். இப்படத்தை விகேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரித்து இருந்தனர்.

உலகளவில் இப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. இதை தொடர்ந்து பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒளிமங்கிய வீட்டிற்குள் நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி ஒரு சொல்கூட பேசாத கதாபாத்திரமாக நாயகி மீனா (அன்னா பென்) அறிமுகமாகிறார். கல்லால் கால் கட்டப்பட்ட சேவல் ஒன்று முடிச்சிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் போராடுகிறது. அந்த சேவலையும் நாயகியையும் நிதானமான ஒளிப்பதிவில் கொண்டு வருகிறார்கள்.

இருவருக்கும் ஒரே வாழ்க்கை என்பதை வசனங்களே இல்லாத காட்சிமொழியில் புரிகிறது. அந்தக் காலையில் மொத்த குடும்பமும் எங்கோ செல்ல தயாராகிறார்கள். இவர்களை அழைத்துச் செல்ல வண்டி வருவதற்காகக் காத்திருக்கின்றனர்.

வாகனம் பாண்டி (சூரி) வீட்டு வாசலில் நிற்கிறது. மேலே தலையைத் உயர்த்தியபடி, ’எல்லாம் மாறுமா?’ என்கிற யோசனையில் இருக்கும் பாண்டியின் தொண்டைக்கட்டிக்கு அவன் தங்கை சுண்ணாம்பு குழைவைப் பூசிவிடுகிறாள். "நீ என்னணே.. ஊரு உலகத்துல வேற புள்ளையே இல்லாத மாதிரி... அவதான் வேணும்னு இருக்கறவன்... இப்ப சொல்லு நூறு புள்ளைகளை நான் கூட்டியாறேன்” என அண்ணனிடம் உரிமையாகக் கேட்கிறாள். பாண்டி ஆவேசமாக எழுந்து தங்கையை அடிக்கிறான். யாரெல்லாம் தடுக்கிறார்களோ அவர்களுக்கும் மிதி விழுகிறது. ஒருவரும் பாண்டியின் கோபத்திற்கு முன் நிற்க முடியாது என்பதை காட்சி வழியாக உணர்த்துகிறார்கள். தொண்டை கட்டியிருப்பதால் பாண்டி ஒலியற்ற குரலில், ‘எல்லாரும் கிளம்புங்க’ என உத்தரவிடுகிறான்.

பாண்டியின் குடும்பம், மீனாவின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு செல்கிறது. ஆட்டோவில் பாண்டியின் இரு தங்கைகளுடன் ஓரத்தில் மீனாவும் சேவலும் இருக்க, பாண்டி இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்றுகொண்டிருக்கிறான். வழியில், காவலர் ஒருவர் வண்டியை மறிக்க, ‘எங்க வீட்டு புள்ளைக்கு பேய் புடிச்சுருக்கு.. விரட்ட கூட்டிட்டுப் போறோம்’ என்கிறான் பாண்டி. மீனாவுக்குப் பேய் பிடித்திருப்பதாக இரு குடும்பமும் நம்புகிறது. நன்றாக பேசி சிரித்தவள், வாயே திறக்காமல் போனதற்கு யாராவது மருந்து வைத்திருப்பார்களோ என்கிற முடிவுக்கு வந்திருப்பார்கள். பாண்டிக்கு இதில் பெரிய நம்பிக்கைகள் இல்லை. அவனுக்குத் தேவை மீனா மட்டும்தான். முறைப்பெண்ணான அவளை இவன் ஒருதலையாக விரும்பியிருக்கிறான் என்பது வசனங்கள் வழியே புரிய வருகிறது.

ஒருகட்டத்தில் ஆட்டோவில் பாண்டியும் ஏறிக்கொள்கிறான். வண்டி மலைகள், ஓடைகள் என இயற்கையைத் துரத்திக்கொண்டே செல்கிறது. தூரத்தில் எங்கோ பாடல் ஒலிப்பதைக் கேட்கும் மீனா, உதடுகளை அசைத்து மெல்லிய குரலில் அதன் தொடர்ச்சியைப் பாடுகிறாள். அந்தக் குரல் முடிவதற்குள் படாரென அவள் முகத்தில் பாண்டி அடித்ததும், வண்டி நிற்கிறது. முன்னிருக்கையிலிருந்து தாவி மீனா உக்கார்ந்திருக்கும் இடத்திலேயே வைத்து அவளை கடுமையாக தாக்குகிறான். "பாட்டுகேக்குதா உனக்கு... அவனை நினைச்சு பாடுனியாடி...? சனியனே” என முகத்தில் காலை வைத்து மிதிக்கவும், அறையவுமாக கொலைவெறியில் வண்டிற்குள்ளேயே அடித்து நொறுக்கிறான்.

தடுக்கச் சென்ற அனைவருக்கும் அடி விழுகிறது. பக்கத்தில் நெருங்கிய நண்பர்களையும் விளாசியபடி, "உங்களையெல்லாம் நம்பித்தான்டா வேற ஊர்ல இருந்தேன்.. அவ எவன் பின்னாடியோ போறதை வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்களாடா” என மீண்டும் மீண்டும் தாக்குகிறான். மீனாவின் தந்தைக்கும் அடி விழுகிறது. "புள்ளை என்ன பண்றான்னு அப்பன், ஆத்தாளுக்கு தெரியனும்டா.. எவனோ கீழ்சாதிக்காரனை காதலிச்சுட்டு இருந்திருக்கிறா.. இதே என் தங்கச்சிக பண்ணிருந்தா என் அப்பன் இந்நேரம் நாண்டுகிட்டு செத்துருப்பான்டா”.

‘டேய் பாண்டி.. மாமாவ அடிக்கலாமா’? என பாண்டியின் அப்பா அவனைத் தடுக்கச் சென்றதும், ‘போடா’ என ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி தந்தையையும் தள்ளிவிடுகிறான்.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காட்சி இதுவரை இல்லை. அந்த இரண்டு நிமிட சண்டைக்காட்சியில் சூரி தன் நடிப்பை எங்கோ கொண்டு சென்றுவிட்டார். புரோட்டா சூரியை இனி நம்மால் கற்பனை செய்ய முடியுமா என்றுகூட தெரியவில்லை. சிறந்த நடிகர் என்பதற்கு இந்தக் காட்சி உதாரணம். இந்தக் கலவரங்கள் முடிந்ததும், மீண்டும் வண்டி கிளம்புகிறது. பாண்டியின் தங்கைகள், "எப்படி புடிச்ச வைச்ச மாதிரி உக்கார்ந்துருக்கா பாரு... எங்கண்ணன் மாதிரி ஒருத்தன் கிடைப்பானா’ என மீனாவை வார்த்தையால் குத்திப் பார்க்கின்றனர்.

வண்டி செல்ல செல்ல பாண்டி அவளை எதாவது செய்துவிடுவானோ என நமக்கும் இறுக்கம் அதிகரிக்கிறது. மீனாவுக்கு பிடித்த பேயை விரட்டினார்களா? உண்மையில், பேய் யாருக்குப் பிடித்திருக்கிறது? இறுதியில் பாண்டி நினைத்தது நடந்ததா? என்கிற கதையே கொட்டுக்காளி.

ஒரு உள்ளூர்க் கதையை உலக சினிமாவாகவே மாற்றியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ். மிகக் குறைந்த கதாபாத்திரங்கள், மிகக் குறைந்த பட்ஜெட்... ஆனால், மிக காத்திரமான கதை. ஒரே கதையில் பல விசயங்களை, எதார்த்தங்களை நுணுக்கமாகத் தொட்டுச் சென்றிருக்கிறார். சாமியாரைக் காணச் செல்லும் வழியெல்லாம் மலையும், வயலும், ஆறும் என அழகானவை இருந்தாலும் அடிக்கிற வெயிலைக் கதைக்குள் கொண்டு வந்து அந்த அனலை முழுமையாகக் கடத்தியிருக்கிறார். சிறந்த படத்தை உருவாக்க நல்ல திரை எழுத்து இருந்தாலே போதும் என்பதற்கு இப்படம் சான்று. எவ்வளவு அடித்தாலும் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு பிடிவாதமாக இருக்கும் பெண்களே வலிமையானர்கள் என்பதையும் ஆணாதிக்கத்தை பெண்ணிடம் மட்டுமே பாண்டி போன்றவர்களால் காட்ட முடியும் என்பதையும் நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் சூரி சினிமாவில் தனக்கான இடத்தைக் கண்டடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. முழுக்க முழுக்க கதையையும் நடிப்பையும் நம்ப ஆரம்பித்துவிட்டார். கொட்டுக்காளியைப் போன்ற கதைகளுக்காகத்தான் அவர் காத்திருக்கிறார். சிகரெட்டை அடித்துக்கொண்டே மீனாவால் அடையும் தடுமாற்றத்தை உடல்மொழியில் வெளிப்படுத்துவதாகட்டும் ஆட்டோவில் வைத்தே அன்னா பென்னை அடிக்கும் காட்சிகளாகட்டும் வேறு ஒரு சூரி இருக்கிறார். விடுதலை, கருடன் படங்களைத் தாண்டிய நடிப்பு.

மொத்த படத்திலும் அன்னா பென்னுக்கு ஒரே ஒரு வசனம்தான். அவர் அதைக் கூறும்போது பல கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன. அந்தளவிற்கு, அதற்கு முந்தைய காட்சிகளில் முகபாவனையிலேயே பெண்ணாக பிறந்தால் சந்திக்க வேண்டிய துயரங்களைப் புரிய வைத்துவிடுகிறார். அன்னா பென்னைத் தவிர வேறு ஒரு நடிகையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்பதுதான் இந்த நடிப்பின் வெற்றி. ஒரே ஒரு காட்சியில் மீனா, பாண்டியைப் பார்க்கிறாள். அந்த பார்வையைக் கண்டு பாண்டியே முகத்தை திருப்பிக்கொள்கிறான்.

சூரியின் தங்கைகளாக நடித்தவர்கள் உள்பட அனைவரது நடிப்பும் கச்சிதமாக இருக்கின்றன. படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும்தான். பின்னணி இசையே தேவையில்லை என்கிற முடிவுக்கு இயக்குநர் சென்றது ஆச்சரியமாக இருக்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் சப்தங்களையே படத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். இசை இல்லாத குறையே தெரியவில்லை. வட்டார மொழியையும், கதாபாத்திரங்களின் உடல்மொழியையும் கவனமாக படம் முழுவதும் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.

சில காட்சிகளை நீடித்திருக்கலாம். குறிப்பாக, சூரியின் காட்சிகளை இன்னும் வலுவான வசனங்களைக் கொண்டு நிரப்பியிருக்கலாம். பாண்டியின் பார்வையில் படம் திடீரென நிறைவடைவதால், என்ன நடந்தது என ரசிகர்கள் குழப்பமடையலாம்.

பெர்லின், போர்ச்சுகல் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி திரையிடப்பட்டுள்ளது. உண்மையில், அங்கெல்லாம் செல்ல மிகத் தகுதியான திரைப்படம்தான். நம் நாட்டில் படித்து, உயர்ந்து எங்கெல்லாமோ இருக்கின்றனர். ஆனால், இதே சமூகத்தில்தான் இப்படியான மனிதர்களும் உள்ளனர் என்பதை கொட்டுக்காளி வழியாக படக்குழு பதிவு செய்திருக்கின்றனர். தமிழிலிருந்து மேலும் ஒரு சிறந்த படம் கொட்டுக்காளி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


CSC Computer Education



Thoothukudi Business Directory