» சினிமா » திரை விமர்சனம்

தூத்துக்குடி இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை!

வெள்ளி 23, ஆகஸ்ட் 2024 11:58:19 AM (IST)



தூத்துக்குடியைச் சேர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்துவரும் சிறுவன் சிவணைந்தன் படிப்பில் கெட்டிக்காரன். என்ன சேட்டைகள் செய்தாலும், ஊரெல்லாம் திரிந்தாலும் வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். ஆனால், வறுமையான குடும்பம். வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்க உடன் அழைத்துச் செல்லப்படுகிறான். 

20 கிலோ எடையுள்ள தார்களை சிறுவன் சுமப்பதும், அதனால் உடல்வலியால் அழுவதுமாக அந்த வாழ்க்கையை வாழ்பவர்களின் பாரம் கடத்தப்படுகிறது. வாழைத்தார் சுமப்பதிலிருந்து ஒருநாள் விலக்கு கிடைத்தாலும் சிறுவர்களுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்ததுபோல் இருக்கிறது.

ஒருபக்கம், சிவணைந்தனின் ஏழ்மையும், வேறு வழியில்லாமல் வாழைத்தார் பணியும்... மறுபுறம் அவன் விரும்பும் பள்ளிக்கூடமும் அங்கு அவனைக் கவர்ந்த ஆசிரியை பூங்கொடியும் (நிகிலா விமல்). ஆசிரியையின் பெயரை நோட்டில் எழுதிவைப்பதும், அவர் வகுப்பைக் கடந்து செல்லும்போதெல்லாம் கதாநாயகியைப் பார்ப்பதுபோல் வியப்பதுமாக இருக்கிறான். அவனின் நெருங்கிய நண்பன் சேகருடன் சேர்ந்து பூங்கொடியைப் பார்த்து ரசிப்பது, பாடல் பாடுவது என பள்ளிக்காலத்தில் நமக்கு அப்படியிருந்த ஆசிரியைகள் எல்லாரும் நினைவுக்கு வருகின்றனர்.

அதே ஊரில் வாழைத்தார் சுமக்கச் செல்லும் கனி (கலையரசன்) சம்பள உயர்வு கேட்டு தன் ஆள்களைத் திரட்டுகிறான். ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல் முதலாளி ஒப்புக்கொள்கிறார். இந்த உயர்வைக் காரணம் காட்டி வேறு ஒரு வகையில், அந்த மக்களை பெரும் ஆபத்தில் சிக்க வைக்கிறார் முதலாளி. அது என்ன ஆபத்து? வாழைத்தார் சுமப்பதிலிருந்து சிவணைந்தன் தப்பித்தானா? என்கிற கதையாக உருவாகியிருக்கிறது வாழை.

வாழை

அழகான சிறார் பருவம் ஏழ்மையால் எப்படியெல்லாம் சிதைகிறது என்பதை உண்மை சம்பவத்துடன் இணைத்தே வாழை உருவாக்கப்பட்டிருக்கிறது.

தான் சாட்சியாக இருந்த சம்பவத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். அழகான, சுவையான வாழைப்பழத்திற்குப் பின் அதற்காக உழைத்தவர்கள் என்னென்ன பாடுகளைப்பட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது உணர்ச்சிகள் பெருகுகின்றன. பசிக்கும் பஞ்சத்திற்கும் முன் என்ன நடந்தாலும் அவையெல்லாம் நம் கண்ணுக்கே தெரியாது. 

அப்படி ஒரு காட்சி இப்படத்தில் இருக்கிறது. படத்தின் மிகச்சிறந்த காட்சியும், நம்மை உடைக்கும் காட்சியும் அதுதான். கருப்பு வெள்ளை காட்சியில் துவங்கும் திரைப்படம் இறுதியில் நம்மை உலுக்கும் காட்சிகளுடன் நிறைவடைகிறது. மீண்டும் மீண்டும் என் சினிமா, என் மக்கள்பட்ட வலிகளைப் பதிவு செய்வதுதான் என்பதில் மாரி செல்வராஜ் வைத்திருக்கும் உறுதி வாழையில் நன்றாகவே தெரிகிறது.

நம்மை சோகப்படுத்தும் காட்சிகளுக்கு நடுவே சிரிக்கவும் வைத்திருக்கிறார். முக்கியமாக, சிவணைந்தனும் சேகரும் வாழைத்தார் சுமப்பதிலிருந்து பல பொய்களைச் சொல்லி தப்பிக்க முயற்சிக்கின்றனர். ரஜினி ரசிகனாக சிவணைந்தன் தன் காலில் முள்ளைக் குத்தி ரத்தம் வர வைக்கிறான்.

’டேய் சேகரு நீயும் குத்திக்கடா.. இதை வைச்சு தார் சுமக்கறதுல இருந்து தப்பிச்சர்லாம்’ . கமல் ரசிகனான சேகர், ‘நான் கமல் ரசிகன். ரத்தம் வராமலே வந்த மாதிரி நடிப்பேன்டா பைத்தியகாரபயலே’ என்றபடி வீட்டுக்குச் செல்கிறான். ஆனால், அங்கு பொய் சொல்லி மாட்டிக்கொள்கிறான். உண்மையாகவே, ரத்தம் வந்த சிவணைந்தன் அன்று தப்பித்துவிடுகிறான். சேகர், "ம்ம்.. நம்ம ஊர்ல ரஜினி படம்தான் ஓடுது.. கமல் படம் எங்க ஓடுது?” என்கிறான். இருவருக்குமான காட்சிகள் பல இடங்களில் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

சிவணைந்தனாக நடித்த பொன்வேல் மற்றும் சேகராக நடித்த ராகுல் இருவரும் சரியான தேர்வு. நன்றாகவே நடித்திருக்கின்றனர். இருவரும் வாழைத்தோட்டத்திற்குள் ஓடும்போது நாமே ஓடுவதுபோல் பங்களிப்பைச் செய்துள்ளனர். சிவணைந்தனின் அம்மாவாக நடித்தவர் கிளைமேக்ஸ் காட்சியில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அக்காவான திவ்யா துரைசாமி காதல் காட்சிகளில், குடும்பத்தின் நிலையைக் கண்டு வருந்தும் இடங்களிலும் நல்ல நடிப்பையே கொடுத்திருக்கிறார். நடிகர் கலையரசனையும் தாராளமாகப் பாராட்டலாம். கலையரசன், திவ்யா துரைசாமிக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளாத இருவரின் காதல்மொழியும் அழகு.

நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நடிகை நிகிலா விமலுக்கு பெயர் சொல்லும் படமாகவே வாழை அமைந்திருக்கிறது. அழகான, அன்பான ஆசிரியையாக அவர் வரும் காட்சிகளெல்லாம் பழைய நினைவுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு தமிழ் சினிமாக்களை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன. அவர் இந்தியளவில் நல்ல படங்களை செய்யத் தகுதியான கலைஞர். வாழை படத்திலும் வாழைத் தார்களை சுமக்கும் உழைப்பாளிகளின் வாழ்க்கை, நிகிலா விமலின் காட்சிகள், கிளைமேக்ஸ் என ஒளிப்பதிவில் பசுமையையும் சுமையையும் கொண்டு வந்திருக்கிறார். பாடல்களைப் பதிவு செய்த விதத்திலும், கதாபாத்திரங்களுக்கான குளோஸப் காட்சிகளிலும் ஒளிப்பதிவு சிறப்பு.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்குக் கூடுதலாக ஒரு பக்கமே ஒதுக்கலாம் என்பதுபோல் இப்படத்தில் பாடல்களையும் பின்னணி இசையும் அபாரமாகச் செய்திருக்கிறார். தென்கிழக்கு, பாதவத்தி பாடல்கள் இருக்கையிலே அமரவைத்து உணர்ச்சிகளைக் கடத்தும்படியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தீ குரலில் உருவான தென்கிழக்கு பாடல் ரசிகர்களைக் கவரும்.



எடிட்டிங், கலைத்துறை என முடிந்தவரை மாரி செல்வராஜ் எல்லாரிடமும் வேலையை வாங்கியிருக்கிறார். சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். கலையரசனுக்கும் வாழைத்தார் முதலாளிக்குக்கும் இடையேயான சம்பள உயர்வு பிரச்னையை இன்னும் நல்ல வசனங்களால் நிறைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

மாரி செல்வராஜின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது வாழையும் தனித்து தெரிகிறது. சாதாரண செய்தி என நாம் கடந்த சென்றதற்குப் பின், எவ்வளவு ரணம் இருந்திருக்கிறது என்பதை வலியுடன் சொல்லியிருக்கிறார்.

தன் சொந்த வாழ்வின் அனுபவங்களை வைத்தே திரைப்படங்களை இயக்கும் மாரி செல்வராஜ், வாழை படத்திலும் சிறுவயதில் தான் அனுபவித்த ஒன்றையே பதிவு செய்திருப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. படம் முடிந்ததும் நம்முடைய குழந்தைப் பருவங்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவை என்பதை உணர்வோம். வாழை - நிச்சயமாக பார்க்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



CSC Computer Education



Thoothukudi Business Directory