» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் அதிரடி சதம் - மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:56:10 AM (IST)

ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 54 பந்துகளில் 101 ரன்கள் (10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசிய அவர், இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு அளித்த டெவால்ட் பிரெவிஸ் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் ஆட்டத்தால், சென்னை அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்தது.
208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சென்னையின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சென்னை தரப்பில் அகீல் ஹொசைன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதிரடி சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி சிஎஸ்கே அணியின் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய வெற்றியாகும். அதே வேளையில் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் ஆகப்பெரும் தோல்வியாகும். 2013-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 87 ரன்களில் தோல்வி அடைந்த பிறகு மும்பை இந்தியன்ஸின் மாபெரும் அடிசறுக்கல் இதுவே.
குறிப்பாக வான்கடேயில் ஆர்சிபிக்கு எதிராக 2015-ம் ஆண்டு 39 ரன்களில் தோற்றதுதான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதாகும் நேற்று அது தவிடு பொடியாகி 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் முதன் முதலாக 100+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்பு 2015 தொடரில் சேப்பாக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
அதே போல் சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் எடுத்த 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, சிஎஸ்கேவுக்கு எதிராக ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். மும்பை இந்தியன்ஸை 19 முறை சிஎஸ்கே வீழ்த்தி சிஎஸ்கே சாதனை புரிந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 முறை தோற்கடித்துள்ளது.
மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவை 21 முறை வென்றுள்ளது. கடந்த 9 முறை இரு அணிகள் மோதியதில் மும்பை 2 முறையே வென்றுள்ளது அதுவும் குறிப்பாக 2023-க்குப் பிறகு இரு அணிகளும் 6 முறை மோதியதில் மும்பை ஒரேயொரு வெற்றியையே சாதித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் வீரர் சஞ்சு சாம்சன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2021-ல் ருதுராஜ் கெய்க்வாட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 88 ரன்கள் எடுத்ததுதான் சிஎஸ்கே வீரரின் அதிகபட்ச ஸ்கோர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: லக்னோவை வீழ்த்தி பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைத்தது ராஜஸ்தான்!
புதன் 20, மே 2026 5:15:00 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது ஹைதராபாத்!
செவ்வாய் 19, மே 2026 10:55:16 AM (IST)

டி20 கிரிக்கெட்டில் அதிவேக 3,000 ரன்கள்: சாய் சுதர்ஷன் சாதனை!
திங்கள் 18, மே 2026 4:49:24 PM (IST)

வெங்கடேஷ் ஐயர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றிற்குள் நுழைந்தது!
திங்கள் 18, மே 2026 12:29:49 PM (IST)

மாநில அளவிலான கால்பந்து போட்டி: தூத்துக்குடி அணி 3-0 என அபார வெற்றி!
ஞாயிறு 17, மே 2026 9:25:35 AM (IST)

லக்னோவுக்கு எதிராக பந்துவீச்சு வியூகம் பலிக்கவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வேதனை!
சனி 16, மே 2026 4:34:27 PM (IST)










