» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அடில் ரஷீத் ஆட்டத்தை மாற்றிவிட்டார்: தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விளக்கம்!
புதன் 29, ஜனவரி 2025 5:11:42 PM (IST)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு அடில் ரஷீத் ஆட்டத்தை மாற்றிவிட்டார் என கேப்டன் சூர்யகுமார் தெரிவித்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்திய வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்களான சாம்சன் (3 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (14 ரன்கள்), திலக் வர்மா (18 ரன்கள்) சொதப்பியது அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷீத் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தாலும் சிக்கன பந்துவீச்சை (4 ஓவரில் 15 ரன்கள்) வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "நாளின் பிற்பகுதியில் கொஞ்சம் பனி இருக்கும் என்று நினைத்தேன். ஹர்திக் மற்றும் அக்சர் பேட்டிங் செய்தபோது ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் அதை மாற்றிய பெருமை அடில் ரஷீத்தை சாரும். அவர் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். அதனால்தான் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். அவர் எங்களை 1, 2 ரன்கள் வீதம் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற அனுமதிக்கவில்லை. அதனால்தான் எங்கள் அணியிலும் நிறைய ஸ்பின்னர்கள் இருந்தனர்.
டி20 போட்டிகளிலிருந்து நாங்கள் எப்போதும் ஏதாவது கற்றுக்கொள்கிறோம். பேட்டிங்கில் என்ன தவறு செய்தோம் என்பதை இந்த போட்டியிலிருந்து நாங்கள் பார்க்க வேண்டும். தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ஷமி எதிர்காலத்தில் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். வருண் சக்ரவர்த்தி பயிற்சிகளின்போது மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அந்த கடின உழைப்பின் விளைவாக அவர் களத்தில் சிறந்த முடிவுகளைப் பெறுகிறார்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:14:22 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் 2025 மார்ச் 22ல் தொடக்கம்: போட்டி முழு அட்டவணை வெளியீடு!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:43:52 AM (IST)

அதிவேக 6அயிரம் ரன்கள்: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:33:02 PM (IST)

ஆர்சிபி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் நியமனம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:42:47 PM (IST)

கில் புதிய சாதனை: ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:49:32 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பும்ரா விலகல்!
புதன் 12, பிப்ரவரி 2025 11:50:25 AM (IST)
