» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: சண்டிகாரை வீழ்த்தியது தமிழக அணி
திங்கள் 27, ஜனவரி 2025 8:58:17 PM (IST)

ரஞ்சி கிரிக்கெட்டில் சேலத்தில் நடந்த ஆட்டத்தில் தமிழக அணி, சண்டிகாரை வீழ்த்தியது.
90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 6-வது லீக் ஆட்டத்தில் சண்டிகார் அணியுடன் மோதியது. சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே தமிழகம் 301 ரன்களும், சண்டிகார் 204 ரன்களும் எடுத்தன. 97 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 5 விக்கெட்டுக்கு 305 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் சண்டிகாருக்கு 403 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த சண்டிகார் 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மனன் வோரா (47 ரன்), விஷூ காஷ்யப் (4 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சண்டிகார் அணி 50 ஓவர்களில் 193 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மனன் வோரா சதம் அடித்தும் (100 ரன்கள், 131 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) பலன் இல்லை. தமிழகம் தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட்டுகளை அறுவடை செய்தனர். தமிழக அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 டிரா என 25 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் கால்இறுதியையும் வெகுவாக நெருங்கியுள்ளது. தமிழகம் தனது கடைசி லீக்கில் வருகிற 30-ந்தேதி ஜார்கண்ட் அணியை ஜாம்ஷெட்பூரில் எதிர்கொள்கிறது.
பாட்னாவில் நடந்த உத்தரபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் (சி பிரிவு) 355 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பீகார் அணி 236 ரன்னில் அடங்கியது. இதனால் உத்தரபிரதேசம் இன்னிங்ஸ் மற்றும் 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் மராட்டியம் 439 ரன்கள் வித்தியாசத்தில் (ஏ பிரிவு) பரோடாவை பதம் பார்த்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அசுதோஷ் சர்மா அபாரம் : லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:36:00 AM (IST)

ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் முதல் சதம் : ஹைதராபாத் அணி புதிய சாதனை!
திங்கள் 24, மார்ச் 2025 12:32:41 PM (IST)

ருதுராஜ், ரச்சின் அபாரம் : மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது சென்னை!
திங்கள் 24, மார்ச் 2025 10:41:49 AM (IST)

ஐபிஎல் 2025 முதல் டி20 போட்டி: கொல்கத்தாவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!
ஞாயிறு 23, மார்ச் 2025 10:07:48 AM (IST)

சர்வதேச டி20 போட்டியில் அதிவேக விரட்டல்: பாகிஸ்தான் அணி உலக சாதனை!
சனி 22, மார்ச் 2025 12:30:19 PM (IST)

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் : பென் டக்கெட் சவால்
வியாழன் 20, மார்ச் 2025 12:26:34 PM (IST)
