» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் சதம்: ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!
புதன் 29, நவம்பர் 2023 12:12:34 PM (IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்கவீரரான ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசினார்.
இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பீல்டிங்கை தேர்வுசெய்தார். இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு பதிலாக அவேஷ்கான் இடம் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் 4 மாற்றங்கள் இருந்தது. டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெற்றனர்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் பந்தில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேடிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன்5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் கேன் ரிச்சர்ட்சன் பந்தில் கவர் திசையில் நின்ற மார்கஸ் ஸ்டோனிஸிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டையை சுழற்றினார்.
அதிரடியாக விளையாடி சூர்யகுமார் யாதவ்29 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆரோன் ஹார்டி பந்தில், மேத்யூ வேடிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 10.2 ஓவர்களில் 81 ஆக இருந்தது. இதையடுத்து களமிறங்கிய திலக் வர்மா நிதானமாக விளையாட ருதுராஜ் கெய்க்வாட், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.
மட்டையை சுழற்றிய ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் இது அவரது முதல் சதமாக அமைந்தது. அவரது அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் இந்திய அணி 3விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 123 ரன்களும் திலக் வர்மா 24 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி 20 ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச டி 20 போட்டியில் சதம் அடித்த 9-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட். இந்த வகையில் ரோஹித் சர்மா 4 சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 3 சதங்களும், கே.எல்.ராகுல் இரு சதங்களும் அடித்துள்ளனர். சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, தீபக் ஹூடா, ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா ஒரு சதங்கள் அடித்துள்ளனர்.
சர்வதேச டி 20 போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் 2-வது இடத்தை பிடித்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட் (123* ரன்கள்). இந்த வகையில் ஷுப்மன் கில் (126* ரன்கள், நியூஸிலாந்துக்கு எதிராக) முதலிடத்தில் உள்ளார்.
இதனையடுத்து கடுமையான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஹெட் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஆரோன் ஹார்டியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.2 ஓவரில் 47 ரன்கள் குவித்த இந்த ஜோடியை அர்தீப்சிங் பிரித்தார். ஆரோன் ஹார்டி 16 ரன்னில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் 18 பந்தில் 35 ரன்கள் குவித்த ஹெட்டும் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து இங்கிலீஸ் 6 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 17 ரன்னிலும் டிம் டேவிட் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதி வரை போராடிய ஆஸ்திரேலிய அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. இதனால் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.