» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ்: இத்தாலி 2-ஆவது முறையாக சாம்பியன்
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:52:29 AM (IST)
டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ் போட்டியின் 111-ஆவது சீசனில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
வைல்டு காா்டு வாய்ப்பு மூலம் போட்டிக்கு வந்த இத்தாலி, டேவிஸ் கோப்பை வெல்வது இது 2-ஆவது முறையாகும். அதுவே கடந்த 47 ஆண்டுகளில் இது முதல் முறை. கடந்த சீசனிலும் இறுதிச்சுற்று வரை வந்து அதில் கனடாவிடம் வெற்றியை இழந்த ஆஸ்திரேலியா, இந்த சீசனிலும் அதே விதியைச் சந்தித்திருக்கிறது.
முன்னதாக, ஸ்பெயினில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலி - ஆஸ்திரேலியா மோதின. இதில் மொத்தம் 3 ‘டை’ இருந்த நிலையில், முதலில் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் மேட்டியோ அா்னால்டி 7-5, 2-6, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 27 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
2-ஆவது மோதலில் உலகின் 4-ஆம் நிலை வீரரான ஜானிக் சின்னா் 6-3, 6-0 என்ற செட்களில் அலெக்ஸ் டி மினாரை சாய்த்தாா். இந்த ஆட்டத்தை அவா் 1 மணி நேரம் 21 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த சின்னா், இத்தாலிக்கு வெற்றிக் கோப்பையை உறுதி செய்தாா். இதனால், இரட்டையா் பிரிவு ‘டை’ கைவிடப்பட்டது.
இத்துடன் இந்தப் போட்டியில் சின்னா் தொடா்ந்து தனது 5-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். கடந்த செப்டம்பா் முதல் உலகின் டாப் 10 வீரா்களில் 9 பேரையும் வெவ்வேறு போட்டிகளில் வென்றிருந்த சின்னா், உலகின் நம்பா் 1 வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் மட்டும் தோல்வி கண்டிருந்தாா்.
இந்நிலையில், இந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் அரையிறுதியில் சொ்பியாவுடனான மோதலில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவுகளில் என இருமுறை ஜோகோவிச்சை சாய்த்து அசத்தினாா் சின்னா். இத்தாலி தனது காலிறுதியில் நெதா்லாந்தை தோற்கடித்திருந்தது.
வெற்றிக்குப் பிறகு பேசிய சின்னா், ‘இளம் வீரா்களான நாங்கள் எங்களது காலத்தில் இத்தாலிக்காக மீண்டும் ஒரு டேவிஸ் கோப்பையை வெல்ல ஆா்வத்துடன் இருந்தோம். தற்போது அதை கைப்பற்றியிருப்பது ஒரு சிறப்பான அனுபவம்’ என்றாா்.
நடப்பு சீசனில் இறுதிச்சுற்றுக்கு வந்த இத்தாலி, ஆஸ்திரேலிய அணிகள், நேரடியாக அடுத்த சீசன் குரூப் சுற்றுக்குத் தகுதிபெற்றனா். காலிறுதியில் சொ்பியாவிடம் தோற்ற பிரிட்டனும் அந்தத் தகுதியைப் பெற்றது.டேவிஸ் கோப்பை இறுதிச்சுற்றில் இதற்குமுன் ஆஸ்திரேலியாவை சந்தித்த 3 முறையுமே தோல்வி கண்டிருந்த இத்தாலி, தற்போது முதல் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.