» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி சாதனை சதம்; ஜடேஜா 5 விக்கெட் : தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!

திங்கள் 6, நவம்பர் 2023 8:27:39 AM (IST)உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது இந்தியா தொடர்ச்சியாக 8-வது வெற்றியை சுவைத்தது. கோலி சதம் அடித்து தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று அரங்கேறிய 37-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அரைஇறுதியை எட்டிவிட்ட இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் குதித்தன. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் ஜெரால்டு கோட்ஜிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி இடம் பிடித்தார்.

‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி அவரும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தடாலடியாக மட்டைைய சுழற்றிய ரோகித் சர்மா எதிரணியின் இங்கிடி, யான்சென் பந்துவீச்சை தெறிக்கவிட்டார். குறிப்பாக இங்கிடியின் ஒரே ஓவரில் 2 சிக்சர் விரட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். 5 ஓவர்களில் இந்தியா 61 ரன்கள் திரட்டியது. 6-வது ஓவரில் ரோகித் சர்மா (40 ரன், 24 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் மிட்-ஆப் திசையில் நின்ற பவுமாவிடம் கேட்ச் ஆனார்.

அடுத்து ‘பிறந்த நாள் நாயகன்’ விராட் கோலி நுழைந்த போது, ஸ்டேடியமே ஆர்ப்பரித்தது. கோலி அவசரமின்றி பொறுமையை கடைபிடித்தார். மறுமுனையில் கில் 23 ரன்களில் போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஸ்ரேயாஸ் அய்யரும் கைகோர்த்து அணியை வலுவான ஸ்கோரை நோக்கி நகர்த்துவதில் கவனம் செலுத்தினர்.

ஆடுகளம் சுழலுக்கு உகந்த வகையில் மெதுவாக காணப்பட்டதால் கேஷவ் மகராஜின் சுழற்பந்துவீச்சில் அடித்து ஆடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. ஆனாலும் ரன்ரேட் 5.50-க்கு மேலாகவே சென்றது. யான்செனின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி ஓடவிட்ட ஸ்ரேயாஸ் அய்யர், இரு பிரமாதமான சிக்சரும் பறக்க விட்டார். 33.1 ஓவர்களில் இந்தியா 200-ஐ தொட்டது.

அணியின் ஸ்கோர் 227-ஐ எட்டிய போது ஸ்ரேயாஸ் அய்யர் 77 ரன்களில் (87 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த ராகுல் 8 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 22 ரன்னிலும் (14 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினர்.

இன்னொரு பக்கம் கோலி சதத்தை நோக்கி முன்னேறினார். லெக்-சைடில் பீல்டர்களை நிறுத்தி அதற்கு ஏற்ப சுழற்பந்து வீச்சாளர் ஷம்சியை வீச வைத்து கோலிக்கு தென்ஆப்பிரிக்க கேப்டன் கடும் குடைச்சல் கொடுத்தார். இதனால் கோலி சதத்தை எட்டுவதற்குள் அதிக பந்துகளை விரயமாக்க வேண்டி இருந்தது. எப்படியோ ஒரு வழியாக கோலி 49-வது ஓவரில் 119 பந்துகளில் சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவரது 2-வது சதமாகும்.

ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டிகளில் இது அவரது 49-வது சதமாகும். இதன் மூலம் தெண்டுல்கரின் அதிக சத சாதனையை சமன் செய்தார். இதற்கிடையே, கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி ஸ்கோர் 320-ஐ தாண்ட வைத்தார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்தது. கோலி 101 ரன்களுடனும் (121 பந்து, 10 பவுண்டரி), ஜடேஜா 29 ரன்களுடனும் (15 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் தென்ஆப்பிரிக்க பவுலர்கள் 22 வைடு உள்பட 26 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

பின்னர் 327 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு 2-வது ஓவரிலேயே பேரிடி விழுந்தது. இந்த உலகக் கோப்பையில் 4 சதங்கள் விளாசி ரன்குவிக்கும் எந்திரமாக வலம் வரும் குயின்டான் டி காக் 5 ரன்னில் முகமது சிராஜின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதாவது ஆப்ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து அவரது பேட்டில் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பையும் தாக்கியது. மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் பவுமா (11 ரன்) ஜடேஜாவின் சுழலில் கிளீன்போல்டு ஆனார்.

இதன் பின்னர் ஜடேஜாவின் சுழல் ஜாலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ‘விக்கெட் அணிவகுப்பு’ நடத்தினர். அபாயகரமான பேட்ஸ்மேன்களாக வர்ணிக்கப்படும் ஹென்ரிச் கிளாசென் (1 ரன்), டேவிட் மில்லர் (11 ரன்) இருவரும் ஜடேஜாவின் சுழலில் சிக்கி சிதைந்தனர். எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. நடப்பு தொடரில் 4 முறை 350 ரன்களுக்கு மேல்குவித்து சாதனை படைத்த தென்ஆப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் மூன்று இலக்கத்தை கூட தொட முடியாமல் சரணாகதியானது.

27.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென்ஆப்பிரிக்கா 83 ரன்னில் சுருண்டது. இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்காவின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதனால் இந்தியா 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அத்துடன் உலகக் கோப்பையில் 5 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். ஏற்கனவே யுவராஜ்சிங் இந்த சாதனையை படைத்திருந்தார். கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

நடப்பு உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் இந்திய அணிக்கு மற்ற அணிகளின் முடிவு எப்படி இருந்தாலும் இனி ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. இந்திய அணி அரைஇறுதியில் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடிக்கும் அணியை சந்திக்கும். 8-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது 2-வது தோல்வியாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory