» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பஹர் ஜமான் அதிவேக சதம்: நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் 4-வது வெற்றி

ஞாயிறு 5, நவம்பர் 2023 10:20:35 AM (IST)



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான், நியூசிலாந்து அணியை சந்தித்தது.

நியூசிலாந்து அணியில் கை பெருவிரல் காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் வில்லியம்சன் திரும்பினார். வில் யங், மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் நீக்கப்பட்டு மார்க் சாப்மேன், சோதி இடம் பெற்றனர். பாகிஸ்தான் அணியில் உஸ்மா மிருக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினர். பேட்டிங்குக்கு அனுகூலமான ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர்.

ஸ்கோர் 10.5 ஓவர்களில் 68 ரன்னை எட்டிய போது டிவான் கான்வே 35 ரன்னில் (39 பந்து, 6 பவுண்டரி) ஹசன் அலியின் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் சிக்கினார். ஒருநாள் போட்டியில் ஹசன் அலி வீழ்த்திய 100-வது விக்கெட் இதுவாகும். இதைத்தொடர்ந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திராவுடன் கைகோர்த்தார். இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளி வேகமாக ரன் திரட்டினர். 15.4 ஓவரில் 100 ரன்னை எட்டிய அந்த அணி 29 ஓவரில் 200 ரன்னை கடந்தது. 

தொடர்ந்து அருமையாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 88 பந்துகளில் சதத்தை எட்டினார். தொடர்ந்து 2-வது அரைசதம் அடித்து அசத்திய வில்லியம்சன் (95 ரன்கள், 79 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) சதத்தை நெருங்குகையில் இப்திகர் அகமது பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 180 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை போட்டி தொடரில் நியூசிலாந்து அணிஎடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். 

அத்துடன் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. மிட்செல் சான்ட்னெர் 26 ரன்னுடனும் (17 பந்து, 2 சிக்சர்), டாம் லாதம் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டும், ஹசன் அலி, இப்திகர் அகமது, ஹாரிஸ் ரவுப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் (4 ரன்) 2-வது ஓவரிலேயே டிம் சவுதி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம், தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமானுடன் இணைந்தார். பஹர் ஜமான் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை துரிதமாக உயர்த்தினார். அவருக்கு பாபர் அசாம் பக்கபலமாக இருந்தார். பஹர் ஜமான் 63 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பஹர் ஜமான் சொந்தமாக்கினார். ஒருநாள் போட்டியில் அவருக்கு இது 11-வது சதமாகும். அவர் இந்த ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக அடித்த 4-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

21.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்து இருந்த போது 2-வது முறையாக மழை குறுக்கிட்டது. இதனால் 1½ மணி நேரம் ஆட்டம் தடைபட்டு மீண்டும் தொடங்கியது. அப்போது பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 342 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து இருந்த போது மறுபடியும் மழை பெய்தது.பஹர் ஜமான் 126 ரன்னுடனும் (81 பந்து, 8 பவுண்டரி,11 சிக்சர்), பாபர் அசாம்66 ரன்னுடனும் (63 பந்து,6 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

மழையால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 179 ரன்கள் போதுமானதாக இருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி 10 ஓவர்கள் பந்து வீசி விக்கெட்டின்றி 90 ரன்கள் விட்டுக்கொடுத்தார். உலகக் கோப்பை போட்டி தொடரில் பாகிஸ்தான் பவுலர் ஒருவரின் மோசமான பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு ஹசன் அலி 84 ரன்கள் (2019-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

8-வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி 4-வது வெற்றியை பெற்றது. நியூசிலாந்து அணிக்கு இது 4-வது தோல்வியாகும். முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நியூசிலாந்து அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவு ஒருசேர சாதகமாக அமைந்தால் மட்டுமே அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory