» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியில் அழைப்பார்கள் என்ற எண்ணம் இல்லை: பிரிதிவி ஷா

வியாழன் 12, ஜனவரி 2023 5:06:40 PM (IST)

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் 2-வது பெரிய ஸ்கோரை அடித்தும், இந்திய அணியில் அழைப்பார்கள் என்ற எண்ணம் இல்லை என இளம்வீரர் பிரிதிவி ஷா. கூறியுள்ளார். 

குவாஹாத்தியில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை பி-பிரிவு போட்டியில் அசாம் அணிக்கு எதிராக மும்பை 687 ரன்களை 138 ஓவர்களில் குவித்து டிக்ளேர் செய்த ஆட்டத்தின் நாயகன், பிரிதிவி ஷா. இவர் 383 பந்துகளில் 49 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 379 ரன்களை விளாசினார். 21 ரன்கள் எடுத்திருந்தால் லாராவின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனால், அதற்குள் எல்.பி.டபிள்யூ ஆகிவிட்டார். டெஸ்ட் அழைப்பிற்காக காத்திருக்கும் மற்றொரு வீரரும் முன்னாள் கேப்டனுமான ரஹானே 191 ரன்கள் விளாசினார்.

ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் 2-வது பெரிய தனிப்பட்ட ஸ்கோரை அடித்து சாதனை புரிந்துள்ளார் பிரிதிவி ஷா. ரஞ்சி டிராபியில் 350 ரன்களைத் தாண்டிய 9-வது வீரராகத் திகழ்கிறார் பிரிதிவி ஷா.

ஸ்வப்னில் குகலே - 351
விவிஎஸ் லஷ்மண்- 353
செடேஷ்வர் புஜாரா -352
சமித் கோஹெல் - 359 நாட் அவுட்.
விஜய் மெர்ச்சண்ட் - 359 நாட் அவுட்
எம்.வி.ஸ்ரீதர் - 366
சஞ்சய் மஞ்சுரேக்கர் - 377

ஆனால், ரஞ்சி டிராபியின் அதிகபட்ச ஸ்கோருக்கான சாதனையை வைத்திருப்பவர் மகாராஷ்ட்ரா வீரர் பாவ்சாஹேப் நிம்பால்கர். இவர் 1948-ம் ஆண்டு 443 ரன்களை மகாராஷ்டிராவுக்காக கதியாவர் அணிக்கு எதிராக அடித்ததே இன்று வரை உடைக்கப்படாத ஒரு ஸ்கோராக இருந்து வருகிறது.

இந்நிலையில், நீண்ட காலமாக இந்திய அணித் தேர்வுக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் பிரிதிவி ஷா ஏற்கெனவே டெஸ்ட் சதம் ஒன்றை தன் அறிமுக டெஸ்ட்டிலேயே அடித்தவர்தான். ஆனால் ஏனோ அவர் கன்னாப்பின்னாவென்று உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடினாலும் அவரை தேர்வு செய்ய மறுக்கின்றனர், இது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து ஒருவரும் உண்மையை கூறுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

தன் இன்னிங்ஸ் பற்றி பிரிதிவி ஷா கூறும்போது, "உண்மையில் இப்போதுதான் நிம்மதியாக உள்ளது. 400 ரன்களை எட்டியிருக்க வேண்டும். பெரிய இன்னிங்ஸ் வருவதற்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது, இப்போதுதான் அமைந்தது. இன்னும் கூட நின்று ஆடியிருக்கலாம்தான், இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கலாம்தான்.

இந்திய அணியில் அழைப்பார்கள் என்பதெல்லாம் என் சிந்தனையிலேயே இல்லை. செய்ய முடிவதைச் செய்வோம் பிறகு அவர்கள் கூப்பிட்டால் நல்லது, இல்லையெனில் காத்திருப்போம். அந்தந்த கணத்தை வாழ்பவன் நான். மும்பைக்கு ஆடுகிறேன் ரஞ்சி டிராபியை வெல்ல வேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

நான் சரியாக ஆடாதபோது என்னை ஊக்குவிக்காதவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் அவர்களைப் புறக்கணிக்கிறேன். அதுதான் என் கொள்கை. நாம் செய்வதை ஒழுங்காகச் செய்கிறோமா? நம் செயற்பாங்கு நன்றாகச் செல்கிறதா அவ்வளவுதான் எனக்குத் தேவை.

நமக்கு நேர்மையாக இருக்கிறோமோ, கட்டுக்கோப்புடன் இருக்கிறோமா அது போதும். ஆனால் சிலர் வித்தியாசமாகப் பேசுகின்றனர், நம்மை யார் என்று தெரியாதவர்களெல்லாம் நம்மைப் பற்றி தீர்ப்பளிக்கிறார்கள்” என்றார் பிரிதிவி ஷா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory