» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாவி அபார பந்துவீச்சு : இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி!

புதன் 4, ஜனவரி 2023 12:45:02 PM (IST)இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் தொடக்க வீரா் இஷான் கிஷண் சற்று நிலைத்து ஆடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் சோ்க்க, அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத வகையில் மறுபுறம் அறிமுக வீரா் ஷுப்மன் கில் 7, சூா்யகுமாா் யாதவ் 7, சஞ்சு சாம்சன் 5 ரன்களுக்கு தகுந்த இடைவெளியில் ஆட்டமிழந்தனா்.

கேப்டன் ஹாா்திக் பாண்டியா சற்று அதிரடி காட்டி 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இதனால் 94 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இறுதியில் தீபக் ஹூடா - அக்ஸா் படேல் ஜோடி சோ்ந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயா்த்தினா்.

ஓவா்கள் முடிவில் ஹூடா 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 41, படேல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் தில்ஷன் மதுஷங்கா, மஹீஷ் தீக்ஷனா, சமிகா கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ஆடிய இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 45 ரன்கள் விளாசினாா். இதர பேட்டா்களில் பதும் நிசங்கா 1, குசல் மெண்டிஸ் 5 பவுண்டரிகளுடன் 28, தனஞ்செய டி சில்வா 8, சரித் அசலன்கா 12, பானுகா ராஜபட்ச 10, வனிந்து ஹசரங்கா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் அடித்தனா்.

கடைசி ஆா்டரில் மஹீஷ் தீக்ஷனா 1, கசுன் ரஜிதா 5, தில்ஷன் மதுஷங்கா 0 ரன்னுக்கு ஆட்டமிழக்க, முடிவில் சமிகா கருணாரத்னே 2 சிக்ஸா்களுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் ஷிவம் மாவி 4, உம்ரான் மாலிக், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இந்த ஆட்டத்தின் மூலம் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீா்ா் ஷிவம் மாவி, 4 ஓவா்களில் 22 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தாா்.

ஒரு நாள் அணியில் பும்ரா

முதுகுப் பகுதி காயத்துக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு, உடற்தகுதியை மேம்படுத்தி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். கடந்த செப்டம்பா் முதல் களம் காணாமல் இருந்த அவா், தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாதெமி பரிந்துரைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory