» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரூ.16 கோடி கொடுத்து பூரனை ஏலம் எடுத்தது ஏன்? கவுதம் கம்பீர் விளக்கம்
புதன் 28, டிசம்பர் 2022 11:16:19 AM (IST)
ஐபிஎல் ஏலத்தில் நிகோலஸ் பூரனை ரூ.16 கோடி கொடுத்து வாங்கியது குறித்து லக்னோ அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 23-ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 80 வீரர்கள் ரூ. 167 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இதில், 4 வீரர்கள் 16 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதில் ஒருவர் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.16 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
கடந்த சீசனில் சரியாக செயல்படாத காரணத்தினால் தான் அவரை ஐதரபாத் அணி விடுவித்தது. மேலும் அவர் சமீபகாலமாக பார்ம் இன்றி தவித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே பார்மை இழந்து சுமாராக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் நமீபியா போன்ற கத்துக்குட்டி அணிகளுடன் தோற்று முதல் சுற்றுடன் வெளியேறும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக படுமோசமாக செயல்பட்ட அவர் கடைசியில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவரை 16 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்க காரணம் என்ன என்பதை அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது "நான் கடந்த சீசனில் எவ்வாறு செயல்பட்டார் என பார்க்க மாட்டேன். நான் ஒரு வீரரின் திறமை மற்றும் அவரால் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மட்டுமே பார்ப்பேன். ஐபிஎல் தொடர் என்பது 500-600 ரன்களை குவிப்பது மட்டுமல்ல. ஒரு வீரர் அந்த ஒரு சீசனில் உங்களுக்கு 2-3 போட்டிகளை வென்று தரவேண்டும் என பார்ப்பேன், மேலும் அவருக்கு இன்னும் வயது உள்ளது. அத்தகைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நீங்கள் வைத்திருந்தால் அவரை சுற்றி ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியும்.
நான் இந்த ஒரு சீசனுக்காக மட்டும் அவரை எடுக்கவில்லை, அவரால் நீண்ட காலம் ஆட முடியும். மிக குறைந்த வீரரகள் தான் 27-28 வயதில் உள்ளனர். அவர் அத்தகைய வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் விளயாட ஆரம்பித்துவிட்டால் இன்னுன் சிறப்பாக ஆடுவார். சாதனைகள் தலைப்பு செய்தியாக மட்டுமே இருக்கும் ஆனால் அதன் தாக்கம் உங்களை தொடரை வெல்ல வைக்கும் என்று எப்போதும் நான் நம்புகிறேன்.
அணியின் ஆடும் லெவனை என்னால் சொல்ல முடியாது. ஆனால் எங்களிடம் மார்கஸ் ஸ்டோய்னிஸ், பூரான், டி காக் போன்ற வீரர்கள் உள்ளனர். மேலும், இம்பேக்ட் பிளேயர் விதிமுறையும் உள்ளது. நாங்கள் ஆடும் லெவனை உருவாக்கி அதில் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றால் இந்த வீரர்களில் யாரையாவது ஒருவரை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வரலாம்" என கூறினார்.