» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சுப்மன் கில், சஹால் அபார ஆட்டம் : வெஸ்ட் இன்டீஸை வொயிட்வாஷ் செய்தது இந்தியா!

வியாழன் 28, ஜூலை 2022 11:10:30 AM (IST)

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது.

ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களம்கண்டது. தவண், சுப்மன் கில் கூட்டணி சிறப்பான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை கொடுத்தது. 22வது ஓவர் வரை இந்தக் கூட்டணி நீடித்தது. இருவருமே அரை சதம் கடந்த நிலையில் முதல் விக்கெட்டாக தவண் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் ஐயரும் கில் உடன் இணைந்து கூட்டணி அமைத்தார். ஷ்ரேயாஸ் அதிரடியாகவும் விளையாட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த அவர், ஆட்டமிழக்க அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் நிலைக்க தவறினார். யாதவ் 8 ரன்களில் நடையைக் கட்டினார்.

எனினும் மறுமுனையில் இருந்த சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 ரன்கள் எடுத்திருந்தார். 98 ரன்களை தொட்டபோது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ய டக்வொர்த் முறைப்படி இந்திய அணியின் இன்னிங்ஸ் 36 ஓவர்களிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் கில் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது. 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டு இழப்புக்கு 225 ரன்கள் இந்திய அணி எடுத்திருந்தாலும், டக்வொர்த் முறைப்படி அதே 36 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 256 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய பௌலர் முகமது சிராஜ். முதல் பந்தில் கைல் மேயர்ஸ் மூன்றாவது பந்தில் ஷமர் ப்ரூக்ஸ் என இருவரை பூஜ்யத்தில் சிராஜ் அவுட் ஆக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி நிலைகுலைந்தது. சாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் இருவரும் நம்பிக்கை கொடுத்தாலும், விரைவாகவே இவர்களையும் இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க செய்தனர்.

இதையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ, கடைசி நேரத்தில் டெயிலண்டர்கள் விக்கெட்டை சஹால் சீக்கிரமாகவே வீழ்த்தினார். இதனால், 26 ஓவர்களில் 137 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அந்த அணி தரப்பில் கேப்டன் பூரான் மற்றும் பிரண்டன் கிங் இருவரும் தலா 42 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் சஹால் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வென்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை வொயிட்வாஷ் செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory