» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மும்பை டெஸ்டில் மயங்க் அகர்வால் சதம்: இந்திய அணி நிதானமாக ரன் குவிப்பு!

வெள்ளி 3, டிசம்பர் 2021 5:43:37 PM (IST)நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியது. காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா என முதல் டெஸ்டில் விளையாடிய மூன்று வீரர்கள் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்தது. அவர்களுக்குப் பதிலாக விராட் கோலி, சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படுகிறார். நியூசி. அணியில் மிட்செல் இடம்பெற்றுள்ளார்.  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஷுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலும் நியூசிலாந்தின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். 

ஜேமிசன் வீசிய முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் அடித்தார் கில். இருவரும் சுழற்பந்து வீச்சையும் எளிதாகக் கையாண்டார்கள். இதனால் தொடக்கக் கூட்டணியைப் பிரிக்க நியூசி. அணி தடுமாறியது. 27-வது ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. சுழற்பந்து வீச்சை நன்கு விளையாடி வந்த ஷுப்மன் கில்லை 44 ரன்களில் வெளியேற்றினார் அஜாஸ் படேல். தனது அடுத்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் புஜாராவை டக் அவுட் செய்தார் அஜாஸ் படேல். இதன்பிறகு களமிறங்கினார் விராட் கோலி.

அந்த ஓவரின் கடைசிப் பந்தில் கோலியை எல்பிடபிள்யூ செய்தார் அஜாஸ் படேல். டக் அவுட் ஆன கோலி நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் முறையீடு செய்தார். பந்து முதலில் பேட்டில் பட்டதா அல்லது கால் காப்பில் (pad) பட்டதா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் நடுவரின் முடிவை மாற்ற முடியாது என 3-ம் நடுவர் அறிவித்தார். இதில் அதிர்ச்சியடைந்த கோலி, கள நடுவரிடம் விளக்கம் கேட்டார். பிறகு கோபத்துடன் ஓய்வறைக்குச் சென்றார்.  

மயங்க் அகர்வால்,119 பந்துகளில் அரை சதமெடுத்தார். முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 37 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 52, ஷ்ரேயஸ் ஐயர் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். தேநீர் இடைவேளைக்குப் பிறகு மயங்க் அகர்வால் - ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இந்தக் கூட்டணி 80 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள். 3 பவுண்டரிகள் அடித்த ஷ்ரேயஸ் ஐயர், 18 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு களமிறங்கிய சஹா, மயங்க் அகர்வாலுக்கு நல்ல இணையாக விளங்கினார். 196 பந்துகளில் தனது 4-வது டெஸ்ட் சதத்தை அடித்தார் மயங்க் அகர்வால். இன்றைய ஆட்டத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டபோதும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை வழங்கினார். மயங்க் அகர்வாலின் 4 சதங்களும் இந்தியாவில் எடுத்தவை. வெளிநாடுகளில் 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். 

முதல் நாள் முடிவில் இந்திய அணி 70 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 120, சஹா 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இருவரும் 22.2 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்துள்ளார்கள். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory