» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பரிதாப பலி - ஒருவர் படுகாயம்!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:36:33 PM (IST)

pattasualaifire.jpg

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டியில் ‘கிருஷ்ணா பட்டாசு ஆலை’ செயல்பட்டு வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒரு தொழிலாளர் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆலைக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தீவிரமாகத் தேடி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில், நாட்டின் 90% பட்டாசு தேவையை இப்பகுதியே பூர்த்தி செய்கிறது. கடந்த ஆண்டு உரிமம் ரத்து செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கும், இந்த ஆண்டு ஆய்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு 200-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கும் உற்பத்தித் தடை விதிக்கப்பட்டது. 

இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகக் கூறி போராட்டங்கள் நடைபெற்றன. ஆலைகளைத் திறக்க வலியுறுத்தியும் ஆய்வுகளைக் கண்டித்தும் சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 12 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

"தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கவே ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொழிலாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது" எனச் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வும் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory