» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து 3-வது இடத்திற்குத் தள்ளும் ஆளுநர் மாளிகையின் நடைமுறைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 28-ஆம் தேதி 33-வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர்: "இது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், ஆளுநர் மாளிகையிலிருந்து தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலும், இரண்டாவதாக 'ஜன கண மன' தேசிய கீதமும் பாடப்பட்ட பின்னரே மூன்றாவதாகத் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்:
துணைவேந்தரின் இந்த அறிவிப்பிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மத்திய அரசே தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை திட்டமிட்டு மூன்றாவது இடத்திற்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையைத் தொடர்ந்து, மே மாதம் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாகப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குத் தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின.
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில், மாநிலப் பாடல்கள் உள்ள மாநிலங்களில் நடைபெறும் விழாக்களில் மாநிலப் பாடல்தான் (தமிழ்த்தாய் வாழ்த்து) முதலில் பாடப்பட வேண்டும்; அதன் பின்னரே தேசியப் பாடல், மூன்றாவதாகத் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த வழிகாட்டுதலையும் மீறி, 'வந்தே மாதரம்' பாடலைத் தான் முதலில் பாட வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடாகும்.
'நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரில்தான் இந்த நெல்லைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அங்கும் கூடத் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து ஆளுநர் மாளிகை கட்டாயப்படுத்துவதையும், அதைத் துணைவேந்தர் அப்படியே ஏற்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதைத் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.
தமிழ்நாட்டில் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும். வரும் ஜூலை 28-ஆம் தேதி நடைபெறவுள்ள 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதைத் தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!
வெள்ளி 24, ஜூலை 2026 5:47:01 PM (IST)








