» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் உடன் கூட்டணி : த.வெ.க. கூட்டத்தில் தீர்மானம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:43:44 AM (IST)

விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அவர் தலைமையை விரும்பி வருபவர்களை கூட்டணியில் அரவணைப்போம் என்று த.வெ.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
த.வெ.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நாஞ்சில் சம்பத், அருண்ராஜ், சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்பட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நெருங்கும் சூழலில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பேசும்போது, ‘தேர்தலுக்கு 100 நாட்களே இருப்பதால், அனைவரும் ஒற்றுமையுடனும், வீரியத்துடனும், மக்களுக்கு எந்தவிதத்திலும் சிரமம் ஏற்படாதபடி, மக்களுடன் இணைந்தும் பணியாற்ற வேண்டும்.
பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவரும் தி.மு.க., அ.தி.மு.க.வை சாதுர்யமாக எதிர்கொண்டு, த.வெ.க.வின் ஒரு வாக்குகளையும் சிதறவிடாமல், விழிப்புடன் செயல்பட்டு, விஜய்யை முதல்-அமைச்சராக அமர வைத்து அழகு பார்க்க வேண்டும்.
குறிப்பாக இளந்தலைமுறையினர் வாக்குகளை முழுமையாக த.வெ.க.வுக்கு கொண்டுவர வேண்டும். மக்களுக்கான பிரச்சினைகளுக்கு முதலில் ஓடிச்சென்று குரல் கொடுத்து, அதனை தீர்க்கக்கூடிய முதல் நபராக த.வெ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் இருக்க வேண்டும்' என்றனர்.
இதுதவிர, கட்சி தலைமையில் இருந்து வரும் அறிவிப்புகளை நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
* ஊழல் மலிந்த தி.மு.க. ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக விஜய்யை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அவரின் தலைமையை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.
* தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ‘தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு' அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது தலைவரே முடிவெடுப்பார்.
* இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ‘தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு' அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது தலைவரே முடிவெடுப்பார்.
* அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரை முன்னெடுக்கப்படும் என்பன போன்ற 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










