» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை

செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)



கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜரின் 123 –வது பிறந்தநாள் விழா முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின், 123-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் இன்று (15.07.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: பெருந்தலைவர் காமராஜர் விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி, சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜுலை 15 அன்று மகனாகப் பிறந்தார். அவர் முதல்வராக இருந்தபோது 1956 -ஆம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர், 1960 ஆண்டு ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தவர், தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டில் வடிவில் அமைப்பு கொண்டது மாத்தூர் தொட்டிப்பாலம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் கடுமையான வறட்சியை தீர்ப்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது இந்த தொட்டிப்பாலம்.

எளிய குடும்பத்தில் பிறந்து, விடுதலைப் போராட்டத் தொண்டனாக வாழ்வை தொடங்கித் தன்னலமற்ற உழைப்பால், தியாகத்தால், மக்கள் தலைவராக உயர்ந்து, கோடிக்கணக்கான இதயங்களில் குடி கொண்டிருக்கும் பெருந்தலைவர் காமராஜர் 1975 அக்டோபர் 2 அன்று அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளில் நம்மைவிட்டு உடலால் பிரிந்தாலும், நம் நெஞ்சில் நிறைந்தவர் பெருந்தலைவர் காமராஜர் .கர்மவீரர், படிக்காத மேதை, அப்பச்சி என்று கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பெருந்தலைவர் காமராஜர் . 

அன்னாரின்; பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டுக்காக உழைப்பதே தனது இலட்சியம் என்று வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணி மண்படம் கட்ட வேண்டுமென்ற நோக்கத்தில், மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், 26.06.1999 -அன்று தமிழக முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 02.10.2000 அன்று கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

இம்மணிமண்டபத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு திருவுருவச்சிலை வைக்கப்பட்டுள்ளதோடு, பகுதி நேர நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ. விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வலெட் சுஷ்மா, வட்டாட்சியர் முருகன், பாபு, வழக்கறிஞர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்சன், பூதலிங்கபிள்ளை, நகர்மன்ற உறுப்பினர் அனிரோஸ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பிரேமலதா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory