» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-1 மாணவனை குத்திக்கொன்ற கல்லூரி மாணவன் : குமரி அருகே பயங்கரம்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:54:30 PM (IST)
குமரி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணுபரத் (17). கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அவன், பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபெற்ற கோவில் விழாவுக்கு நேற்று இரவு சென்று உள்ளான்.
அவர்கள் அனைவரும் கோவில் வளாகத்தின் அருகே நள்ளிரவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் சந்துரு (21) வந்தார். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர், பகுதி நேரமாக ஆட்டோவும் ஓட்டி வருகிறார். அவருக்கும், விஷ்ணுபரத் மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதமும் நடந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் ஓட்டும் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியால் விஷ்ணுபரத்தின் விலா மற்றும் பின்பகுதியில் குத்தி உள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். ஆத்திரத்தில் செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த சந்துரு பின்னர் சுதாரித்துக்கொண்டு தனது ஆட்டோவில் விஷ்ணு பரத்தை தூக்கி போட்டுக்கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷ்ணு பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் மகன் கத்தியால் குத்தப்பட்ட தகவல் கிடைத்து விஷ்ணு பரத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை தேடி வந்தனர். அப்போது சந்துரு, தனது ஆட்டோவில் விஷ்ணு பரத் உடலைக்கொண்டு வந்து வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.
பள்ளி மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் நேரில் வந்து பலியான விஷ்ணு பரத்தின் உடலை பார்வையிட்டார். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சந்துரு, நாளை நடைபெறும் திருவிழாவிற்கு நீ வரக்கூடாது என விஷ்ணு பரத்திடம் கூறியதாகவும், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பி ஓடிய சந்துருவை தேடிவந்தனர்.
இந்த நிலையில் அவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடைந்த விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று சந்துருவை கைது செய்ய கூடங்குளம் சென்றனர்.பின்பு அவரை கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-1 மாணவனை கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? விஜய் பற்றிய கேள்விக்கு: ஓபிஎஸ் பதில்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:11:11 PM (IST)

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:05:20 PM (IST)

நெல்லை, குமரியில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? மாவட்ட வாரியாக பட்டியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:45:04 PM (IST)

பக்தர்கள் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் தற்கொலை: ஸ்ரீரங்கத்தில் சோகம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:49:39 PM (IST)

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)










