» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாயத்திற்கு நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்த வேண்டும் : ஆட்சியர் இரா.சுகுமார்

சனி 29, மார்ச் 2025 5:57:01 PM (IST)



விவசாயத்திற்கு நுண்ணீர் பாசனம் மூலம் சிக்கனமாக பயன்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பேசினார்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இட்டேரி ஊராட்சியில் இன்று (29.03.2025) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், சுத்தமான குடிநீர் விநியோகம் உறுதி செய்தல் ஆகியன குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பேசும்போது தெரிவித்ததாவது:- உலக தண்ணீர் தினத்தை (22.03.2025) முன்னிட்டு நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், நீரின்றி அமையாது உலகு என்கிற உன்னத வரிகளுக்கேற்ப தண்ணீரே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது. வான்தரும் மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொரு மரம் வளர்த்தல் என அனைத்திலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும். 

கிராமசபை கூட்டம் செயலகத்திற்கு ஈடானது. இந்த கிராமசபைக் கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம். அனைத்து துறைசார்ந்த வளர்ச்சிகளும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கிராமத்தின் வளர்ச்சியினை பூர்த்தி செய்யலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு நுண்ணீர் பாசனம் மூலம் சிக்கனமாக பயன்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும். 

இப்பகுதிகளில் நியாயவிலை கடைக்கு கட்டிடம் வேண்டுமென்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், விரைவில் நியாயவிலைக் கடை கட்டி தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சமுதாய நலக்கூடம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் தங்கள் அருகிலுள்ள வீட்டின் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருந்தால், அவர்களையும் பள்ளிக்கு செல்வதற்கான முயற்சியினை எடுத்து, குழந்தைகளுக்கு கல்வி தடைபடாமல் பார்த்துக் கொள்வதோடு, பள்ளி செல்லா குழந்தைகள் இல்லா மாவட்டமாக நமது மாவட்டமாக மாற்ற அனைத்து பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்தார். தொடர்ந்து, நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முகமது ஷபி, ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள், துணைத் தலைவர் சுப்புலெட்சுமி, இணை இயக்குநர் (வேளாண்மை) வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், மாவட்ட சுகாதார அலுவலர் கீதாராணி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory