» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா?- அன்புமணி

வெள்ளி 28, மார்ச் 2025 12:31:21 PM (IST)

தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமாக உள்ள  மதுக் கடைகளை மூட மனமில்லையா?-  என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது அருந்தும்போது, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

முத்தையன்பட்டி அரசு மதுக்கடையில் காவலர் முத்துக்குமார் மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அருகில் மது குடித்துக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலருடன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அங்கேயே மோதல் முடிந்தாலும் கூட, போதையில் இருந்த எதிர்கும்பல் முத்துக்குமாரை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் படுகொலை செய்துள்ளனர்.

முத்துக்குமாரை கொலை செய்த கும்பல் கஞ்சா வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், கஞ்சா வணிகத்தைக் கைவிட்டு திருந்தும்படி முத்துக்குமார் அறிவுரை வழங்கியதால் தான் அந்த கும்பல் ஆத்திரமடைந்து மதுபோதையில் படுகொலை செய்திருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மது, கஞ்சா ஆகிய இரண்டும் சமூகத்தை எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று.

மது மனிதனை மிருகமாக்கும் என்றும், மக்களைக் காக்க மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை அரசு பொருட்படுத்தாதன் விளைவு தான் ஒரு காவலரின் உயிர் பறிபோயிருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாத அந்த காவலரின் குடும்பம் ஆதரவின்றி நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கும், கொலைகளுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மது அருந்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மக்கள் நலனா, மது வணிகமா? என்ற வினா எழுந்தால் மக்கள் நலனுக்குத் தான் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுக்கடைகளை மூட வேண்டும். ஆனால், அதை செய்ய தமிழக அரசுக்கு மனம் இல்லை.

மக்கள் நிம்மதியாக வாழ்வதை உறுதி செய்வதும், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதும் தான் மாநில அரசின் அடிப்படைக் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு பெரும் தடையாக இருப்பது மதுக்கடைகள் தான். எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory