» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பயங்கரவாதிகள் நுழைய வாய்ப்பு: கடலோரப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க ரஜினி வேண்டுகோள்!

திங்கள் 24, மார்ச் 2025 8:43:13 AM (IST)

கடல் வழியாக பயங்கரவாதிகள் நுழையலாம். கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. படகுகள் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் 175 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருகட்டமாக சி.ஐ.எஸ்.எப். எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ‘கிரேட் இந்தியன் கோஸ்டல் சைக்ளதான்' என்ற பெயரில் முதல் முறையாக மேற்கு வங்காளத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து நாடு முழுவதும் சைக்கிளில் பேரணியாக வலம் வருகின்றனர். கடந்த 7-ந் தேதி இந்த பேரணியை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 125 வீரர்கள் 2 பிரிவாக சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு உள்ளனர். இதில் ஒரு பிரிவினர் மேற்கு வங்காள மாநிலம் பக்காலியில் இருந்து சைக்கிளில் சென்னை, புதுச்சேரி வழியாக, கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவிடத்துக்கு வருகின்றனர்.

மற்றொரு பிரிவினர் மேற்கு கடலோர பகுதியான குஜராத்தின் லக்பட்டில் இருந்து சூரத், மும்பை, கோவா, கொச்சி வழியாக கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவிடத்துக்கு வருகின்றனர். 25 நாளில் 6,553 கி.மீ. தொலைவை அவர்கள் சைக்கிளில் கடந்து பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இதற்கிடையே தங்கள் பகுதிக்கு சைக்கிளில் பேரணியாக வரும் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:  நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷத்தை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை அந்த சம்பவம் காவு வாங்கியது.

எனவே கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து மேற்கு வங்காளத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பேரணி செல்கின்றனர். இந்த பேரணி உங்கள் பகுதிக்கு வரும்போது வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று வாருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory