» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

செவ்வாய் 18, மார்ச் 2025 3:40:59 PM (IST)



நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி இன்று (மார்ச் 18) அதிகாலை ஒரு கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. படுகொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றியவர்.

இவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முர்த்தின் ஜஹான் தைக்காவுக்கு சொந்தமான 32 செண்ட் வக்பு இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த சட்டரீதியாக போராடியதே காரணமாகும் என கூறப்படுகிறது. வக்பு சொத்தை சட்டரீதியாக மீட்கும் முயற்சியில் உள்ள தனக்கு எதிராக ஒரு குழு கொலை திட்டம் மேற்கொண்டு வருவதாக அவர் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அந்த வீடியோவில் யார் யாரெல்லாம் அந்த சொத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள், யாரால் தனக்கு அச்சுறுத்தல் என்கிற விவரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்காத நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த அலட்சியப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு. ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 

பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது. 

ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory