» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பழைய இரும்பு வியாபாரியிடம் விற்கப்பட்ட ஆதார் அட்டைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி!!
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:43:43 AM (IST)
வடக்கன்குளத்தில் பழைய இரும்பு வியாபாரியிடம் கட்டுக்கட்டாக ஆதார் அட்டைகள் விற்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று பழைய நோட்டு புத்தகம், அட்டை, இரும்பு பொருட்கள் போன்றவற்றை விலைக்கு வாங்கி வருவார்.
நேற்று காலையில் சரவணன் வடக்கன்குளம் பகுதியில் வீடு வீடாக சென்று பழைய பொருட்களை விலைக்கு வாங்கினார். அங்குள்ள கடைகளிலும் பழைய பொருட்களை வாங்கினார். பின்னர் அவற்றை தனது கடைக்கு கொண்டு வந்து தரம் பிரித்தார்.
அப்போது பழைய நோட்டு புத்தகங்களுக்கு இடையே புதிய ஆதார் அட்டைகள் வினியோகிக்கப்படாமல் கட்டுக்கட்டாக இருந்தது தெரிய வந்தது. மேலும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், வங்கி கடிதங்கள் போன்றவையும் வினியோகிக்கப்படாமல் இருந்தன.
அதாவது, வடக்கன்குளம் அருகே ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக தபாலில் அனுப்பப்பட்ட 153 ஆதார் அட்டைகள், 13 வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு வங்கி கடிதங்களை உரியவர்களிடம் வழங்காமல் பழைய நோட்டு புத்தகங்களுடன் எடைக்கு விற்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், இதுகுறித்து பணகுடி போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் ெதரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஆவரைகுளம் பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக தபாலில் அனுப்பப்பட்ட ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் போன்றவற்றை தபால்காரர் உரியவர்களுக்கு வழங்காமல், மொத்தமாக வைத்து பழைய இரும்பு வியாபாரியிடம் எடைக்கு விற்றதாகவும், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய ஆதார் அட்டைகள் கட்டுக்கட்டாக பழைய இரும்பு வியாபாரியிடம் எடைக்கு விற்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.