» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங்கிரஸ் நிர்வாகி மரண வழக்கு: சபாநாயகர் அப்பாவுவிடம் விரைவில் விசாரணை..?
புதன் 29, மே 2024 4:43:32 PM (IST)
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு தொடர்பாக சபாநாயகர் உட்பட முக்கிய பிரமுகர்களிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஜெயக்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திலும் ஆய்வு செய்தனர்.
அங்கிருந்து சில தடயங்களையும் சேகரித்தனர். சிபிசிஐடி போலீஸார் நடத்திய ஆய்வுகளில் கிடைத்துள்ள சில தடயங்களையும், ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்ட போலீஸார் தங்களது விசாரணையின்போது சேகரித்து ஒப்படைத்துள்ள தடயங்களையும் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் ஒப்பிட்டு பார்த்து அதன்மூலம் ஏதேனும் புதிய தகவல்கள் கிடைக்குமா? என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
இதனிடையே, ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட 32 பேருக்கும் சம்மன் அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து சிபிஐடி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, "தற்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரித்து சரிபார்த்து வருகிறோம். அதன் பின்னர் விசாரிக்கப்பட வேண்டிய நபர்களுக்கு சம்மன் அனுப்பும் பணிகள் நடக்கும். இன்னும் சில தினங்களில் சம்மன் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை ஒரு வாரத்தில் அழைத்து விசாரணை நடத்தப்படும்” என்றனர்.
தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.