» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இயக்குநர் பா ரஞ்சித் சாதிய மோதலை தூண்டுகிறார்’: பரமக்குடி போலீசில் புகார்!

சனி 25, மே 2024 12:55:58 PM (IST)

திருநெல்வேலியில் நடந்த தீபக் ராஜா கொலை வழக்கில் திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சி செய்வதாக பரமக்குடி டிஎஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் தீபக் ராஜா. இவர் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள ஹோட்டலில் வருங்கால மனைவியுடன் சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தீபக் ராஜாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

தீபக் ராஜாவை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்தன. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில் தீபக் ராஜா, பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் என்பதும், அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சாதிய ரீதியிலாகவும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மொத்தம் 6 தனிப்படையை சேர்ந்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தீபக் ராஜா கொலை வழக்கு பற்றி ஒரு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அந்த பதிவில், ‛‛திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாக கண்டிக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பர் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சகோதரர் தீபக் ராஜா பாளையங்கோட்டையில் உணவகத்துக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்.

சக மனிதனை படுகொலை செய்யும் சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்சி, எஸ்டி வ்னகொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்கிட வேண்டும்'' என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த பதிவில் குறிப்பிட்ட இன்னொரு சமுதாயத்தின் பெயர் சேர்க்கப்பட்டு அவர்களை சாதிவெறி பிடித்த குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதிவுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் இயக்குனர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதனிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‛‛இயக்குனர் பா ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டிவிட முயற்சிக்கிறார். திருநெல்வேலயில் தீபக் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை கூறி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

Rajaமே 26, 2024 - 09:12:42 PM | Posted IP 172.7*****

Nenga kola pannuna onnum illa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory