» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் முறையீடு: பரிசோதனைக்கு உத்தரவு!
புதன் 15, மே 2024 4:55:28 PM (IST)
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மாநகர சைபர் க்ரைம் போலீஸார், சவுக்கு சங்கரிடம் ஒருநாள் விசாரணை நடத்தி முடித்தனர். பின்னர் சவுக்கு சங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 4-ல் செவ்வாய்க்கிழமை மாலை ஆஜர்படுத்தினர். இதையடுத்து, மீண்டும் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண் காவலர்கள் பாதுகாப்புடன் - தொடர்ந்து, சவுக்கு சங்கரை திருச்சி போலீஸார் புதன்கிழமை காலை கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவரை திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கரை திருச்சியைச் சேர்ந்த மகளிர் போலீஸாரே அழைத்து வந்தனர்.
மேலும், திருச்சி நீதிமன்ற வளாகத்திலும், நூற்றுக்கும் அதிகமான பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படடிருந்தனர். இதனிடையே, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தால் சவுக்கு சங்கருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் துடைப்பத்துடன் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக, திருச்சி மாவட்ட காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று அவரை திருச்சி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியிருந்தனர். திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா முன்பு நடந்த விசாரணையின்போது சவுக்கு சங்கர், இன்று காலை கோவை மத்திய சிறையில் அழைத்து வந்த பெண் போலீஸார், காலை உணவுக்கு பொங்கல் வாங்கி தந்துவிட்டு, கண்ணாடியை கழட்டிவைக்கச் சொல்லிவிட்டு, பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு திருச்சி மகாத்மாக காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும், இந்த விசாரணையின் போது, சவுக்கு சங்கரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி மாவட்ட காவல் துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.