» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாய் கடித்து குதறிய 5 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை; உரிமையாளர்கள் 3 பேர் கைது

திங்கள் 6, மே 2024 5:21:33 PM (IST)

சென்னையில் தடை செய்யப்பட்ட ராட்வைலர் நாய் கடித்து குதறியயதில் 5 வயது சிறுமி பலத்த காயம் அடைந்தார். நாய் உரிமையாளர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியின் 4-வது தெருவில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் 5 வயது சிறுமி ஞாயிறு இரவு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தப் பூங்காவுக்கு எதிரே ஹேம்கேர் ரத்த வங்கி உள்ளது. இந்த ரத்த வங்கியின் உரிமையாளர் புகழேந்தி தனது வளர்ப்பு பிராணிகளான இரண்டு ராட் வைலர் நாய்களை அழைத்துக் கொண்டு மாநகராட்சிப் பூங்காவுக்கு நடைபயிற்சிக்காக வந்திருந்தார்.

அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை புகழேந்தின் இரண்டு வளர்ப்பு நாய்கள் மிகக் கடுமையாக கடித்து குதறியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், நாய்களை அடித்து விரட்டி, ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அச்சிறுமிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த ராட் வைலர் நாய்கள் தடை செய்யப்பட்ட இனங்கள் என்பதும், இவற்றை வளர்க்க புகழேந்தி லைசென்ஸ் எதுவும் பெறவில்லை என்பதும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நாய் குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீஸார் புகழேந்தி அவரது மனைவி தனலெட்சுமி மகன் வெங்கடேஷ்வரன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சிறுமியை கடித்து குதறிய நாய்க்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதா? தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கால்நடைத் துறை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory