» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு இழப்பீடு விவகாரம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!!
வியாழன் 21, மார்ச் 2024 8:13:56 AM (IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இதுவரை ஏன் வசூலிக்கவில்லை? என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மனித உரிமை ஆர்வலர் வக்கீல் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த அதிகாரிகளை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் ஆஜராகி, இந்த வழக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அரசுக்கு அளித்த விளக்கத்தை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது அரசு இதுவரை எதுவும் கூறவில்லை.
அதற்கு தொடர்ந்து அவகாசம் கேட்கிறது. அதுமட்டுமல்ல, 13 பேர் பரிதாபமாக பலியான துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி ஒரு இன்ஸ்பெக்டர் மீது மட்டும் குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது'' என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘பலியானோர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகையை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய அதிகாரிகளிடம் இருந்து ஏன் இதுவரை வசூலிக்கவில்லை? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் அப்பாவி பொது மக்கள் தான். இதுபோன்ற சம்பவம் எதிர்காலங்களில் நடைபெற கூடாது என்பதில் நாங்கள் (நீதிபதிகள்) கவனமாக உள்ளோம்'' என்று கூறினர்.
பின்னர், இந்த வழக்கின் இறுதி வாதங்களுக்காக வழக்கை வருகிற 27-ந்தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறோம். அன்று இருதரப்பும் வாதங்கள் செய்ய வேண்டும். அவகாசம் கேட்கக்கூடாது'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.