» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.100 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்: மு.க. ஸ்டாலின்

சனி 24, பிப்ரவரி 2024 4:37:20 PM (IST)

கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.100 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(24.02.2024) செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளிட்ட 2465 கோடி ரூபாய் செலவிலான 96 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 1802.36 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஆற்றிய உரையில், "நீர் இன்றி அமையாது உலகு!’ இதைவிட குடிநீரின் தேவையை யாராலும் விளக்கி சொல்லிவிட முடியாது. 

அதனால்தான், கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர்த் திட்டங்களை நாம் தீட்டி வழங்கி வருகிறோம். 2006-2011 கழக ஆட்சியில், நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க 2007-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். அதற்கு பிறகு 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அதை திறந்து வைத்தார்கள்.

இந்த நிலையத்திலிருந்து கிடைக்கின்ற குடிநீர் மூலம், வடசென்னையில் சுமார் 10 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து நெம்மேலியில், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு 2010-ஆம் ஆண்டு நான்தான் அடிக்கல் நாட்டினேன். இந்த நிலையத்தின் மூலமாக, தென் சென்னையில் வசிக்கின்ற சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனால்தான், பேரூரில், இது மாதிரியான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் நாள் அந்த நிலையத்திற்கும் நான்தான் அடிக்கல் நாட்டினேன். அந்த நிலையம், தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமைய இருக்கிறது. இந்த நிலையத்தை அமைக்கின்ற பணிகள் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு நிச்சயமாக, உறுதியாக கொண்டு வரப்படும்! நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் இன்றைக்கு நாட்டு மக்களுடைய பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையத்திலிருந்து பெறப்படுகின்ற குடிநீர் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் ஓ.எம்.ஆரில் இருக்கின்ற ஐ.டி. நிறுவனப் பகுதிகளில் இருக்கின்ற சுமார் 9 இலட்சம் மக்கள் பயனடைவார்கள். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன்.

நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற 172 கோடி ரூபாய் மதிப்பிலான 52 திட்டப்பணிகளையும் திறந்து வைத்திருக்கிறேன். இதேபோல, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கின்ற 70 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பேரூராட்சிகள் இயக்கத்தை எடுத்துக்கொண்டால், 33 கோடி ரூபாய் மதிப்பிலான 12 திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மூன்று தனி குடிநீர்த் திட்டங்களையும், ஆறு கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் தொடங்கி வைத்திருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 533 கோடி ரூபாய்! 364 வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டிருக்கின்ற குப்பைகள், 648 கோடியே 38 இலட்ச ரூபாய் செலவில், உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கின்ற பணிக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில், 813 கோடி ரூபாய் மதிப்பிலான 23 திட்டப்பணிகளுக்கும்,பேரூராட்சி இயக்குநரகம் சார்பில், 238 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இப்படி மொத்தம் 1,802 கோடி ரூபாய் மதிப்பில் 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இவை எல்லாமே திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாகவே திறக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.


மக்கள் கருத்து

makkalFeb 26, 2024 - 09:27:50 AM | Posted IP 172.7*****

Kadum nithi nerukkadiyilum pena silai vaikkiroam.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory