» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜகவுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வீழ்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

வெள்ளி 23, பிப்ரவரி 2024 5:55:42 PM (IST)

பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை முழுமையாக வீழ்த்திட வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

"தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும்" என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பங்கேற்று அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியது: "மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம்.

நேற்று நான் சட்டமன்றத்தில், ஒரு அழைப்பு விடுத்தேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடமும், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26-ம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது. தாய் தமிழ்நாட்டையும், நம் கட்சியையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 

விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால், அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன். அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்இடி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது.

இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இப்போது நாம் தீர்மானமாக நிறைவேற்ற உள்ளோம்” என்று பேசினார். பின்னர் இந்தக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை: நாடாளுமன்றத் தொகுதிவாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டங்கள் பொதுமக்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. பாஜக வீழ்த்தப்பட வேண்டிய கட்சி என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக மக்கள் மன்றத்தில் வைத்துள்ளோம். 'நாற்பதும் நமதே - நாடும் நமதே' என்ற முழக்கத்துடன் இக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்டச் செயலாளர்களின் இக்கூட்டம் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ம் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

பிப்.26-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதனோடு மறைமுகக் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை முழுமையாக வீழ்த்தி, தமிழக முதல்வரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும் என இந்தத் கூட்டம் தீர்மானிக்கிறது.

திமுக தலைவர், தமிழக முதல்வரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி நடத்திடுவது எனவும் இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.


மக்கள் கருத்து

JAY FANSFeb 26, 2024 - 04:32:21 PM | Posted IP 172.7*****

அதிமுக பிஜேபி யிடம் மறைமுக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை ஆனால் திமுக விடம் மறைமுக கூட்டணி வைக்க வாய்ப்புஇருக்கு.

reply to JojnFeb 24, 2024 - 04:14:24 PM | Posted IP 162.1*****

Nandragaullatha? nandrathaaaan ullatha?

JOHNFeb 24, 2024 - 10:04:32 AM | Posted IP 172.7*****

DMK GOVT NANRATHAN ULLATHU

ஓட்டு போட்ட முட்டாள்Feb 23, 2024 - 10:04:02 PM | Posted IP 162.1*****

அப்படியானால் தூத்துக்குடிக்கு மோடி ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்ட வருகிறார், அப்போ ஸ்டாலினும் வருகிறார் மோடி தமிழகத்துக்கு வந்தால் சிவப்பு கம்பளம் அமைத்து பல்லை காட்டிட்டு ஈ ஈ பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள் அந்த திருட்டு திராவிட நடிகர்கள் குடும்பங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory