» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி படுகொலை: நாடகமாடிய 4 பேர் அதிரடி கைது

புதன் 14, பிப்ரவரி 2024 8:17:34 PM (IST)

பணகுடி அருகே இரும்பு கம்பியால் தாக்கி வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதனை மறைக்க விபத்து நாடகமாடிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேல பெருவிளை கிராமத்தை சேர்ந்தவர் ஆல்வின் அருள் ஜோஸ் (41). இவர் பழைய வாகனம் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இவர் மேலபெருவிளை பகுதியில் உள்ள ஜெப மாலை மாதா ஆலயத்தின் பங்கில் உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

கடந்த 2-ந்தேதி கார் விற்பனை தொடர்பாக ஆல்வின் அருள் ஜோசை, ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தார். அதன்பேரில் அவரும் தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சிறிது நேரத்தில் ஆல்வின் அருள்ஜோஸ் செல்போன் எண்ணில் இருந்து அவரது குடும்பத்தினருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, ஆல்வின் அருள்ஜோஸ் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சுயநினைவின்றி கிடப்பதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு ஆம்புலன்சில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 10 நாட்களுக்கு பின்னர் ஆல்வின் அருள்ஜோஸ் நினைவு திரும்பாமல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் ஏற்கனவே விபத்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஆல்வின் அருள்ஜோஸ் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் பணகுடி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆல்வின் அருள்ஜோஸ் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் உத்தரவின் பேரில் பணகுடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆல்வின் அருள் ேஜாஸ் பங்கு உறுப்பினராக உள்ள ஆலயத்தில் நிர்வாகம் சம்பந்தமாக கணக்கு கேட்டதில் இவருக்கும், ஆலயத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆல்வின் அருள்ஜோஸ் தரப்புக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நாகர்கோவிலை சேர்ந்த இருதயராஜனின் 2-வது மனைவியும், ஆல்வின் அருள்ஜோசும் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை இருதயராஜன் பலமுறை கண்டித்தும் ஆல்வின் அருள்ஜோஸ், பேசுவதை கைவிடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இருதயராஜன் இதுபற்றி ராஜேஷிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆல்வின் அருள்ஜோசை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக கார் விற்பனைக்கு அழைப்பது போல் ஆல்வின் அருள் ஜோசை செல்போனில் அழைத்துள்ளனர். பின்னர் அவரை காவல்கிணறு பகுதியில் வைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு விபத்தில் சிக்கியது போல் அவரது குடும்பத்தினரையும், போலீசாரையும் நம்ப வைத்து நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பணகுடி போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த ராஜேஷ், இருதயராஜன், கோட்டாறு பகுதியை சேர்ந்த விஜய், நெல்லை தாழையூத்தை சேர்ந்த சின்னத்துரை ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory